மதுரை: நாட்டில் ஆன்மீகச் சுற்றுலாவை ஊக்குவிக்கும் வகையில், இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை எடுத்துரைக்கும் வகையிலும், பாரத் கௌரவ் ரயில் திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இந்த பாரத் கௌரவ் ரயில்கள் தனியார் நிர்வாகம் மூலம் இயக்கப்பட்டு வருகின்றன. இத்திட்டத்தின் முதல் ரயில், கடந்த ஜூன் மாதம், கோவையிலிருந்து சீரடிக்கு இயக்கப்பட்டது.
இந்த நிலையில், மதுரையிலிருந்து சீரடிக்கு பாரத் கௌரவ் ரயில் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. டிசம்பர் மாதத்தில், மதுரையிலிருந்து பண்டரிபுரம், சீரடி, மந்த்ராலயம் ஆகிய ஆன்மீக தலங்களுக்கு சுற்றுலா ரயில் இயக்கப்படவுள்ளது.
அதன்படி, மதுரையிலிருந்து டிசம்பர் 24-ம் தேதி புறப்படும் சுற்றுலா ரயில், திண்டுக்கல், திருச்சி, விழுப்புரம், சென்னை வழியாக, பண்டரிபுரம் செல்கிறது. டிசம்பர் 25ஆம் தேதி பண்டரிபுரம் பாண்டுரங்கன் தரிசனம், டிசம்பர் 27ஆம் தேதி சீரடி சாய்பாபா தரிசனம், டிசம்பர் 29ஆம் தேதி மந்திராலயம் ஸ்ரீ ராகவேந்திரர் தரிசனம் முடித்து, டிசம்பர் 29ஆம் தேதி சுற்றுலா ரயில் மதுரை வந்து சேரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரயில் பயண கட்டணம், உணவு, தங்குமிடம், உள்ளூர் போக்குவரத்து போன்றவை உள்பட குறைந்த கட்டணத்தில் இந்த சுற்றுலா ரயில் இயக்கப்படுகிறது.
இந்த சுற்றுலா ரயிலுக்கான பயண சீட்டுகளை www.ularail.com என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம். மேலும் விவரங்களுக்கு, 7305858585 என்ற அலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: கர்நாடகாவில் தீப்பற்றி எரிந்த ஆட்டோ... தமிழ்நாடு எல்லையில் பாதுகாப்பு தீவிரம்...