மதுரை அருகே உள்ள முத்துப்பட்டி, அவனியாபுரத்தில் பெரும்பான்மையான குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் கட்டில் பின்னுதல் தொழிலை, வீட்டில் இருந்தவாறே செய்துவருகின்றனர். விதவிதமான வண்ணங்களில் பல்வேறு வடிவமைப்புகளில் கட்டில்களை உருவாக்குகின்றனர்.
இவர்களுக்குத் தேவையான அனைத்துப் பொருள்களும், கட்டில் உற்பத்தி நிறுவனத்தால் வழங்கப்படுகிறது. அதனைக்கொண்டு வீட்டின் வெளியே சாவகாசமாக அமர்ந்து, அக்கம்பக்கத்து பெண்கள் ஒருவரோடு ஒருவர் பேசிக்கொண்டே இந்த வேலைகளை ஆர்வமுடனும் வேகமுடனும் செய்துவருகின்றனர், மதுரை பெண்கள்.
'மாடு மேச்ச மாதிரியும் ஆச்சு, மச்சானுக்கு பொண்ணு பார்த்த மாதிரியும் ஆச்சு' என்று கிராமங்களில் ஒரு சொலவம் (பழமொழி) உண்டு. அதைப்போன்றே வீட்டு வேலைகளைப் பார்த்துக்கொண்டு இந்தத் தொழிலையும் இப்பெண்கள் மேற்கொண்டுவருகின்றனர்.
இந்த ஊரின் எந்தத் தெருவுக்குள் நுழைந்தாலும் குடும்பப் பெண்கள் கட்டில்களை பின்னிக்கொண்டிருக்கும் காட்சி மிக சாதாரணமானதாகும்.
அந்த ஊரைச் சேர்ந்த கல்யாணி என்ற வயதான பெண்மணி கூறுகையில், "எங்களுக்கு இதுதான் தொழில். இதன்மூலமாக வரும் வருமானத்தைக்கொண்டே எனது மகள்களுக்குத் திருமணம் செய்துவைத்தேன். என்னுடைய கணவர் இறந்த பின்னர், கடந்த 25 ஆண்டுகளாக நானும் என் பிள்ளைகளும் இந்தத் தொழிலைத்தான் செய்துவருகிறோம்" என்கிறார்.
மரத்தடி நிழல், வீட்டுத் திண்ணை, தெருவோரம் என அவர்களுக்கு வசதியான இடங்களில் அப்பெண்கள் கட்டில்களைப் பின்னிக் கொண்டிருக்கிறார்கள். அருகே விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தைகளையும் அவ்வப்போது கண்காணிக்கிறார்கள். வீட்டில் உலை கொதிக்கும் சத்தம் கேட்டவுடன், எழுந்து ஓடிச்சென்று வீட்டு வேலைகளையும் கவனிக்கிறார்கள்.
இது குறித்து கோமதி என்ற பெண் கூறுகையில், 'கணவரின் வருமானத்தை வைத்து வீட்டுச் செலவுகளைச் சமாளிக்க முடிவதில்லை. ஆகையால், குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பிவிட்ட பிறகு, கட்டில் பின்னி கொடுக்கிறோம். சராசரியாக நாள் ஒன்றுக்கு ரூபாய் 200 வருமானம் ஈட்டுகிறோம். இங்கு உள்ள எல்லா குடும்பத்தினர்களுக்கும் இது ஏற்ற தொழிலாக உள்ளது' என்கிறார்
பாவு நெய்வதற்கு இரண்டு பேர் வேண்டும். பிறகு பின்னுவதற்கு ஒருவர் மட்டும் போதும். ஆகையால், ஒருவருக்கொருவர் ஒத்தாசை செய்தும் (உதவியும்) இந்தத் தொழிலை மேற்கொள்கின்றனர். வேலை முடித்து கட்டில்களை எல்லாம் ஓரிடத்தில் அடுக்குகிறார்கள். பிறகு அந்தந்த நிறுவனத்தார் வந்து, அவற்றை அள்ளிச் செல்கின்றனர்.
இளங்கலை வணிகவியல் பயின்ற பட்டதாரி பெண் புவனேஸ்வரி கூறுகையில், 'படித்து முடித்த பின்னர் வேலையில்லாமல் இருக்கும் நேரத்தில் இந்தத் தொழிலே ஓரளவிற்கு உத்தரவாதம் தருகிறது. என்னைப்போன்று நிறைய பட்டதாரி பெண்கள் இந்தத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.
இங்கு இருக்கின்ற 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் கட்டில் பின்னுவதால், தமிழ்நாடு அரசு எங்களைப்போன்ற தொழிலாளர்களை அங்கீகரித்து அமைப்புசாரா தொழிலாளர் வாரியத்தில், எங்களை இணைத்துக்கொள்ள முன்வர வேண்டும். கரோனா தொற்று போன்ற பேரிடர் காலங்களில் எங்களுக்குத் தமிழ்நாடு அரசு உதவ முன்வர வேண்டும்' என்று வேண்டுகோள்விடுத்தார்.
ஆண்டு முழுவதும் இந்தத் தொழில் இருக்கின்ற காரணத்தால், குறைந்தபட்சம் மாதம் ஒன்றுக்கு சராசரியாக ரூபாய் 19 லட்சம் கிடைக்கிறது. முத்துப்பட்டி பெண்களால் இந்த ஊரின் வருமானம் பெருகுகின்றது. ஆண்டுக்குச் சராசரியாக ரூபாய் 2 கோடி வரை வருமானம், இந்த எளிய பெண்களால் முத்துப்பட்டி கிராமத்திற்குக் கிடைக்கிறது.
இதனைக் கருத்தில்கொண்டு தமிழ்நாடு அரசு கட்டில் பின்னுதல் தொழிலில் ஈடுபட்டுள்ள, இந்தப் பெண்களின் எதிர்கால நலனைக் கருதி, அவர்களின் வேண்டுகோளுக்கு செவிமடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுகிறது.
இதையும் படிங்க... 'புதிய தொழில் கத்துக்கோங்க' - கல்லூரி மாணவருக்கு கைகொடுக்கும் கற்றாழை ஜூஸ் தொழில்