மதுரை அரசு ராசாசி மருத்துவமனை உயர் சிகிச்சை பல்நோக்கு மருத்துவமனை வளாகத்தில், கரோனா சிறப்பு சிகிச்சை மருத்துவமனை செயல்பட்டுவருகிறது. இங்கு தற்போது இரண்டாயிரத்திற்கும் அதிகமான நோயாளிகள் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
இவர்கள் அனைவருக்கும் ஊட்டச்சத்து மிகுந்த சத்தான உணவுகள் வழங்குவதற்காக, மருத்துவமனை வளாகத்திலேயே தனிச் சிறப்புமிக்க சமையலறை உருவாக்கப்பட்டுள்ளது. இங்கு 35 சமையல்கலை வல்லுநர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். இதில் 30 பேர் பெண்கள் ஆவர்.
கரோனா நோயாளிகளுக்கு உணவு வழங்கும் விஷயத்தில் ஊட்டச்சத்து நிபுணர்கள் அடங்கிய குழுவினர் ஆலோசனையின் பேரில் புரதச்சத்து மிகுந்த சத்தான உணவுகள் மூன்று வேளையும் வழங்கப்படுகிறது. கரோனா வார்டில் உள்ள நோயாளிகளுக்கு காலை உணவாக இட்லி, சட்னி, சாம்பார், வெண்பொங்கல், உப்புமா, ராகி சேமியா, காய்கறி கிச்சடி ஆகியவை வழங்கப்படுகின்றன.
காலை 10:30 மணிக்கு மஞ்சள், மிளகு கலந்த 200 மில்லி பால் தரப்படுகிறது. இத்துடன் சுண்டல் மற்றும் அவித்த முட்டை வழங்கப்படுகிறது. மதிய உணவில் சாம்பார் சாதம், பூண்டு ரசம், கீரை, அவித்த முட்டை ஆகியவை இடம்பெறுகிறது. சாம்பார் சாதம் பிடிக்கவில்லை எனில் அவர்கள் தக்காளி சாதம், பிரியாணி, தேங்காய் சாதம், லெமன் சாதம், சாம்பார் சாதம் ஆகியவற்றை தேர்வுசெய்து கொள்ளலாம்.
மாலை 4 மணிக்கு இஞ்சி கலந்த தேநீருடன் அவித்த சுண்டல் வழங்கப்படுகிறது. இதுதவிர, அவர்கள் தினசரி காலை 6 மணி, மதியம் 3 மணி ஆகிய இரண்டு வேளைகளும் கபசுர குடிநீர் வழங்கப்படுகிறது.
மேலும், நோயாளிகளிடம் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் வகையில், இயற்கை மூலிகைகள் செறிந்த நீராகாரம் அவ்வப்போது தரப்படுகிறது. அடுத்ததாக இரவு 7 மணி முதல் 8 மணிக்குள் நோயாளிகளுக்கு இரவு உணவுடன் ஆப்பிள், ஆரஞ்சு, கொய்யா, வாழைப்பழம் ஆகியவை வழங்கப்படுகின்றன.
இதையும் படிங்க: கரோனா ஹீரோக்களுக்கு பாராட்டு ஓவியம்: 400 பேர் வரைந்து சாதனை