மணல் கடத்தல் வழக்குகளில் சிறைபிடிக்கப்பட்ட வாகனங்களை விடுவிக்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி சுரேஷ்குமார், மணல் கடத்தல் தொடர்பான வழக்குகளை ஏற்கனவே விசாரித்த உயர் நீதிமன்ற மதுரைக்கிளை அமர்வு பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.
குறிப்பாக கனிமவளம் தொடர்பான வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்களை அமைக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆனால் இதுவரை அந்த உத்தரவு நடைமுறைப் படுத்தப்படவில்லை. ஆகவே 30 நாட்களுக்குள்ளாக கனிம வளம் தொடர்பான வழக்குகளை விசாரிப்பதற்காக சிறப்பு நீதிமன்றங்களை அமைப்பது குறித்த அறிவிப்பை அரசு வெளியிட வேண்டும்.
இதனை தவறும் பட்சத்தில் சம்பந்தபட்ட அதிகாரிகள் மீது நீதிமன்றம் தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை எடுக்கும் என உத்தரவிட்டார். மேலும் வழக்கு தாக்கல் செய்த பல்வேறு மனுதாரர்களுக்கும் 5 ஆயிரம் முதல் 75 ஆயிரம் வரை அபராதம் விதித்து, அதனை அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் செலுத்த வேண்டும். அந்த அபராதத் தொகையை அரசு பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த பயன்படுத்த வேண்டும் என உத்தரவிட்டு இந்த வழக்கை முடித்து வைத்தார்.