மதுரை: திருமங்கலம், கள்ளிக்குடி காவல் நிலையத்திற்கு உட்பட்ட கள்ளிக்குடி உட்கடை பொட்டல்பட்டி கிராமத்தில் பிறந்து சில மணி நேரங்களிலே ஆன ஆண் குழந்தை ஒன்று முட் புதரில் கிடந்துள்ளது. இது குறித்து தகவலறிந்த கள்ளிக்குடி கிராம நிர்வாக அலுவலர் முகம்மது தயூப் சம்பவ இடத்திற்குச் சென்றார். தொடர்ந்து அவர் அளித்த தகவலின்பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர் அந்த குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. ஆனாலும், சிகிச்கை பலனளிக்காமல் அந்த குழந்தை மருத்துவனையில் இறந்து விட்டது.
எனவே, கிராம நிர்வாக அலுவலர் கொடுத்த புகாரின் பேரில் சந்தேக மரண வழக்காக பதிவு செய்யப்பட்டு, குழந்தை இறப்பதற்கு காரணமாக இருந்த குழந்தையின் தாய் அனுப்பிரியா என்பவர் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார்.
மேலும், பெற்ற தாயால் கைவிடப்பட்டு பிறந்து சில மணி நேரமே ஆன குழந்தையை மீட்பதற்கும் மேலும் அந்த குழந்தையின் இறப்பிற்கு காரணமாக இருந்த குற்றவாளியைக் கண்டறிந்து சட்ட நடவடிக்கை எடுக்கும் விதமாக புகார் அளித்து, சமூக பொறுப்புடனும் அக்கறையுடனும் செயல்பட்ட கள்ளிக்குடி கிராம நிர்வாக அலுவலர் முகம்மது தயூப்பை மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: "குழந்தை எப்படி சிகப்பாக பிறக்கும்?" - காதல் மனைவியை கொன்ற கணவருக்கு ஆயுள் தண்டனை!
கிராம நிர்வாக அலுவலரின் இந்த மனிதநேய சேவை அப்பகுதியைச் சேர்ந்த பொது மக்களால் பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது. அதுமட்டும் இன்றி குற்றச் செயலுக்கு காரணமான தாயாரையும் உடனடியாக கண்டறிந்து கைது செய்ய உதவியதற்கும் பொதுமக்கள் தங்களது பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்.
மேலும், இது போன்ற குற்றச் செயல்கள் தொடர்பாக தகவல் அளிக்க முன் வருமாறு மாவட்ட காவல் துறை சார்பாக கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அவ்வாறு அளிக்கப்படும் தகவல் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தகவல் அளிப்போரின் ரகசியம் காக்கப்படும் என்றும் மதுரை மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: திண்டுக்கல் காவலப்பட்டி ஊராட்சி நிதி முறைகேடு; ஊரக வளர்ச்சித்துறை முதன்மைச் செயலர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு