மதுரை: ஓணம் பண்டிகை வரும் ஆகஸ்ட் 31ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. கேரளாவில் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படும் இந்த பண்டிகைக்காகப் பொதுமக்கள் நாடுமுழுவதும் உள்ள அம்மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் கேரளாவிற்குச் செல்வதற்குத் தயாராகி வருகின்றனர்.
இந்த நிலையில், தமிழ்நாட்டிலிருந்து கேரளாவிற்கு ஏராளமான ரயில்கள் செல்கின்றன. இதனிடையே, இந்தாண்டு ஓணம் பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் கூட்ட நெரிசலைத் தவிர்ப்பதற்காக, தாம்பரம் கொச்சுவேலி இடையே மேலும் ஒரு சிறப்பு ரயிலை இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே இன்று (ஆக.23) ஒரு செய்திக் குறிப்பை வெளியிட்டுள்ளது.
அதில், 'ஓணம் பண்டிகை கூட்ட நெரிசலைச் சமாளிக்கத் தாம்பரம் - திருவனந்தபுரம் கொச்சுவேலி இடையே மேலும் ஒரு சிறப்பு ரயிலை இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது. இதன்படி, செப்டம்பர் 2 அன்று தாம்பரம் - கொச்சுவேலி சிறப்பு ரயில் (06047) தாம்பரத்திலிருந்து மாலை 05.00 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை 08.00 மணிக்கு கொச்சுவேலி சென்று சேரும்.
இதையும் படிங்க: விளையாட்டு பொம்மைகளில் மறைத்து தங்கம் கடத்தல்: திருச்சி விமான நிலையத்தில் சிக்கிய குருவிகள்!
பின்னர், மறு மார்க்கத்தில் செப்டம்பர் 3 அன்று கொச்சுவேலி - தாம்பரம் சிறப்பு ரயில் (06048) கொச்சுவேலியில் இருந்து காலை 11.40 மணிக்குப் புறப்பட்டு, திருநெல்வேலி மற்றும் மதுரை ரயில் நிலையங்களுக்கு முறையே மாலை 03.10 மற்றும் 05.35 மணிக்கு வந்து சேர்ந்து அங்கிருந்து முறையே மாலை 03.15 மற்றும் 05.40 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் அதிகாலை 03.00 மணிக்குத் தாம்பரம் சென்று சேரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சிறப்பு ரயில்கள் செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாச்சலம், ஸ்ரீரங்கம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி, வள்ளியூர், நாகர்கோவில் டவுன், இரணியல், குழித்துறை, நெய்யாற்றின் கரை, திருவனந்தபுரம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
இந்த ரயில்களில் 14 குளிர்சாதன மூன்றடுக்கு குறைந்த கட்டண படுக்கை வசதி பெட்டிகள், 3 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 2 இரண்டாம் வகுப்பு பொது பெட்டிகள், 2 இரண்டாம் வகுப்பு பொது பெட்டிகளுடன் கூடிய சரக்கு பெட்டிகள் இணைக்கப்படும். இந்த ரயில்களுக்கான பயணச்சீட்டு முன்பதிவு தற்பொழுது நடைபெற்று வருகிறது' என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: "பில்டிங் ஸ்ட்ராங் பேஸ்மென்ட் வீக்" மக்கர் செய்யும் அரசின் புதிய மஞ்சள் பேருந்துகள்.. நெல்லையில் பயணிகள் அவதி!