மதுரை மாவட்டம் ஆத்திகுளம் பகுதியைச் சேர்ந்தவர் நமச்சிவாயம். இவரது மனைவி பார்வதி. இவர்களுக்கு செந்தில்குமார், சுரேஷ்குமார் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்களில் மூத்த மகன் செந்தில்குமாருக்கு திருமணமாகி அவருடையை மனைவியை கடந்த எட்டு மாதங்களாகப் பிரிந்து தாயுடன் வாழ்ந்துவருகிறார்.
இந்நிலையில், நள்ளிரவு வீட்டில் வெகுநேரமாகத் தூங்காமல் செந்தில்குமார் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து பார்வதி, செந்தில்குமாரை தூங்கச் சொல்லி திட்டியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த செந்தில்குமார், தாய் பார்வதி அசந்து தூங்கிக் கொண்டிருந்த நேரத்தில் வீட்டின் அருகேயிருந்த கல்லைத் தலையில் போட்டு கொலைசெய்ய முயன்றுள்ளார்.
இதில் படுகாயமடைந்த பார்வதியை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு இராசாசி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மகனை தூங்கச் சொன்னதற்காக பெற்றத் தாயை கல்லைப் போட்டு மகன் கொலைசெய்ய முயன்ற சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், செந்தில்குமாரை கைது செய்த காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.