மதுரை: திருப்பரங்குன்றம் தாலுகாவுக்கு உட்பட்ட வில்லாபுரம் வீட்டுவசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் துரைப்பாண்டியின் மகன் கதிர்வேல்(36). இவருக்கு, சண்முகப்பிரியா என்ற மனைவியும், ஹனிஸ்க் (7), பார்த்திவ் (3) என இரண்டு மகன்களும் உள்ளனர்.
இவர், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அசாம் மாநிலத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது கடும் மழைப்பொழிவின் காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த ராணுவ அலுவலர்கள், கதிர்வேலின் உடலை மீட்டு அசாம் தலைமையகத்திற்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து விமானம் மூலம் சென்னை கொண்டு வரப்பட்டு, தற்போது சென்னையில் இருந்து மதுரை விமான நிலையத்திற்கு அவரின் உடல் கொண்டுவரப்பட்டது.
மதுரை தேசிய மாணவர் படை சுபேதார் பிரமோத் சார்பில், தேசிய கொடி பொருத்தப்பட்ட மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
பின்னர் மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர், மதுரை மாநகர் காவல் துணை ஆணையர் தங்கதுரை, மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன், மதுரை விமான நிலைய இயக்குனர் பாபுராஜ், விமான நிலைய மத்திய தொழில் பாதுகாப்பு படை கமாண்டன்ட் உமாமகேஸ்வரன், உறவினர்கள் உள்ளிட்டோர் பலர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் கதிர்வேலின் உடல் மதுரை விமான நிலையத்திலிருந்து ஆம்புலன்ஸ் மூலம் வில்லாபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அவரது உடல் இன்று(ஜூலை.25) தகனம் செய்யப்பட உள்ளது.
இதையும் படிங்க: அசாம் நிலச்சரிவு - தமிழ்நாடு ராணுவ வீரர் மரணம்!