மதுரை அருகே எல்லீஸ் நகர் பகுதியைச்சேர்ந்தவர் வீரய்யா. இவருடைய மகன் பிரகாஷ் (21). இவர் பழங்காநத்தம் பகுதியில் இருக்கக்கூடிய ஆட்டோ ஒர்க்ஷாப்பில் மெக்கானிக்காகப் பணியாற்றி வந்துள்ளார். கடந்த மூன்று மாதத்திற்கு முன்பு ஏற்பட்ட விபத்தில் காலில் முறிவு ஏற்பட்டு, வேலைக்குச்செல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு, வீட்டின் அருகே உள்ள ரயில்வே தண்டவாளப்பகுதியில் அதேபகுதியைச்சேர்ந்த சிறார்களுடன் அமர்ந்து மது அருந்திக்கொண்டிருந்தபோது வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் பிரகாஷ் சிறார்களை கடுமையாகத் தாக்கியதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே நேற்று வீட்டுவாசலில் அமர்ந்திருந்த பிரகாஷை, அங்கு வந்த அதே பகுதியைச் சேர்ந்த ஆறு சிறார்கள் சரமாரியாக வெட்டி விட்டு தப்பியோடி உள்ளனர். மேலும் அவரை தடுக்க வந்த பிரகாஷின் சித்தி வாசுகி அம்மாளையும் காலில் வெட்டிவிட்டு தப்பியோடி உள்ளனர்.
ரத்த வெள்ளத்தில் கிடந்த பிரகாஷை மீட்ட உறவினர்கள் அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் அங்கு சிகிச்சைப்பலனின்றி, அவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், அவருடைய சித்தி வாசுகிக்கு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்தச்சம்பவம் தொடர்பாக பிரகாஷின் தந்தை வீரய்யா அளித்த புகாரைத்தொடர்ந்து எஸ்.எஸ். காலனி காவல்துறையினர் ஆறு பிரிவின்கீழ் வழக்குப் பதிவு செய்து, அதே பகுதியைச் சேர்ந்த ஆறு சிறார்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
மது போதையில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக ஆறு சிறார்கள் இளைஞர்கள் கொடூரமாக வெட்டி கொலை செய்த சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:குடும்ப தகராறில் மனைவி, மகள், மாமியாரை கத்தியால் குத்திய நபர் கைது