மதுரை: விருதுநகர் மாவட்டம், சிவகாசியைச் சேர்ந்த தனியார் தீப்பெட்டி தொழிற்சாலை உரிமையாளர் மணிவேல் மற்றும் அவரது மகன் ரவி செல்வம் ஆகியோர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் முன்ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்திருந்தனர்.
அதில், "சிவகாசி அருகே திருத்தங்கல் பகுதியில் தனியார் தீப்பெட்டி ஆலையில் கடந்த மாதம் 1ஆம் தேதி தீ விபத்து ஏற்பட்டது. அதில் ஒருவர் உயிரிழந்திருந்தார். அதனைத் தொடர்ந்து திருத்தங்கல் கிழக்கு காவல் நிலையத்தில் வெடிமருந்து தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் இறந்தவரின் குடும்பத்தினருக்கு எங்களின் சார்பாக இழப்பீட்டுத் தொகை ரூ.5 லட்சத்து 50 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. எனவே, இந்த வழக்கில் எங்கள் இருவருக்கும் முன்ஜாமீன் வழங்க வேண்டும்" என மனுவில் கூறியிருந்தனர்.
இந்த மனு நீதிபதி முரளி சங்கர் அமர்வு முன்பு நேற்று (ஏப்ரல் 1) விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, இருவருக்கும் முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். மேலும் இரண்டாவது மனுதாரர் ரவி செல்வம் 3 லட்சம் ரூபாயை வழக்கு நடைபெறும் நீதிமன்றத்தில் வைப்புத் தொகையாக கட்ட வேண்டும் என்ற நிபந்தனையுடன் முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: மீண்டும் பணி வழங்கக் கோரி செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்!