மதுரை: திருச்சியை சேர்ந்த நித்யா உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றினைத் தாக்கல் செய்துள்ளார். அதில், சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் உழவர் சந்தை முழுமையாக கட்டப்பட்டு பத்து ஆண்டுகள் ஆகிறது. கட்டட பணிகள் முடிந்தும் உழவர் சந்தை இது நாள் வரை திறக்கப்படாமல் உள்ளது.
சிவகங்கை மாவட்டத்தை பொறுத்தளவு இங்கு விளையும் விளைபொருட்கள் திண்டுக்கல், திருச்சி, போன்ற மாவட்டங்களுக்கு ஏற்றுமதியாகிறது. அதேபோல இங்கு உழவர் சந்தை அமைத்தால் 20 விழுக்காடு விலை குறைவாக, மக்களுக்கு காய்கறிகள் கிடைக்கும். மேலும் இங்குள்ள வியாபாரிகளுக்கு அரசே இலவசமாக டிஜிட்டல் தராசுகளை வழங்குகிறது.
இதனால் பொதுமக்களுக்கு சரியான எடையில் காய்கறிகள் கிடைக்க வாய்ப்புள்ளது. மேலும் இப்பகுதியில் விவசாயிகள் தங்கள் விளை பொருட்களை நியாயமான விலையில் விற்கவும் வழி உள்ளது. ஆனால் தற்போது வெளி மார்க்கெட்டில் கூடுதல் விலைக்கு வாங்கி வரும் அவலம் உள்ளது.
அதனால் முழுமையாக கட்டட பணிகள் அனைத்தும் முடிந்து 10 ஆண்டுகள் ஆனாலும் இங்கு உள்ள கட்டடங்களை திறக்காமல் உள்ளனர். இந்த உழவர் சந்தையை திறப்பதற்கு அரசு உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் தெரிவித்திருந்தார். இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆனந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிபதிகள், இது குறித்து தமிழ்நாடு அரசின் வேளாண் துறை செயலாளர் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உத்தரவிட்டு பிப்ரவரி 3ஆம் தேதிக்கு விசாரணையை நீதிபதிகள் ஒத்தி வைத்துள்ளனர்.