மதுரை: தூத்துக்குடியைச் சேர்ந்த வசந்தகுமார், உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றினை தாக்கல் செய்துள்ளார்.அதில், தூத்துக்குடி மாப்பிள்ளை ஊரணி பகுதியில் ஸ்ரீ அருள்மிகு சங்கர ராமேஸ்வரர் கோயில் மற்றும் அருள்மிகு வைகுண்டபதி திருக்கோயில் ஆகிய பிரசித்தி பெற்ற கோயில்கள் அமைந்துள்ளன.
இந்த கோயில்கள் சுமார் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த புராதானமிக்க கோயிலாக உள்ளது. இந்தக் கோயில்களில் பழங்காலத்தில் இருந்தே பூ விற்கவோ அல்லது பிரசாதம் விற்கவோ எந்தக் கடையும் இல்லை. ஆனால் தற்போது பூக்கடைகள் மற்றும் பிரசாத விற்பனைக் கடைகள் நடத்துவதற்கு, கோயிலின் செயல் அலுவலர் டெண்டர் நடத்தி கோயில் வளாகத்தினுள் கடைகளை ஒதுக்கீடு செய்துள்ளார்.
இது முற்றிலும் கோயிலின் பழமையான பழக்க வழக்கங்களுக்கு எதிரானது. அருள்மிகு சங்கர ராமேஸ்வரர் திருக்கோயிலைப் பொறுத்தவரை, நுழைவாயிலின் மொத்த அகலம் 20 அடி மட்டுமே. இந்த நிலையில் கோயிலின் வளாகத்திற்குள் கடைகள் செயல்படுவதால், பக்தர்கள் கோயிலின் உள்ளே சென்று வர மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
இதனால் கோயில் வளாகத்தில் அமைந்துள்ள பல்வேறு பழமை வாய்ந்த சிற்பங்கள் மறைக்கப்படுகிறது. அது மட்டுமன்றி, கோயிலின் நுழைவாயிலின் சில பகுதியைக் கூட அலுவலர்கள் மாற்றியுள்ளனர். கோயில் வளாகத்தினுள் கடைகள் அமைந்துள்ளதால், திருவிழா காலங்களில் சாமி ஊர்வலங்கள் நடத்தப்படுவதில்லை.
இதுகுறித்து அலுவலர்களிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே தூத்துக்குடி மாப்பிள்ளை ஊரணி பகுதியில் ஸ்ரீ அருள்மிகு சங்கரராமேஸ்வரர் கோயில் மற்றும் அருள்மிகு வைகுண்டபதி திருக்கோயிலின் நுழைவு வாயிலில் அமைந்திருக்கும் கடைகளை அகற்றச் உத்தரவிட வேண்டும்" என குறிப்பிடப்பட்டுள்ளது.
இம்மனு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் மகாதேவன் மற்றும் சத்தியநாராயண பிரசாத் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, “கோயில் பிரகாரத்தினுள் வணிக நோக்கத்தில் கடைகள் அமைத்து செயல்பட அனுமதிக்க முடியாது.
பூக்கடைகளை கோயிலின் வெளியே அமைப்பது குறித்து, சங்கர ராமேஸ்வரர் திருக்கோயில் செயல் அலுவலர் தகவல் பெற்று தெரிவிக்க உத்தரவிடப்படுகிறது” என உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை ஒத்தி வைத்தனர்.
இதையும் படிங்க: திருச்செந்தூர் முருகன் கோயிலில் பின்பற்றப்படும் கட்டுப்பாடுகள்- பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு