மதுரை: தமிழ்நாட்டில் கரோனா இரண்டாம் அலை வேகமாகப் பரவி வருவதைக் கட்டுப்படுத்தும் வகையில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், மதுரையில் அமைச்சர் மூர்த்தி, நடமாடும் காய்கறி வாகனங்கள், அவற்றில் விற்பனை செய்யப்படும் பொருள்களின் விலையைக் கேட்டறிந்து ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறுகையில், ”மதுரை மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர், காவல் துறையினர் ஆகியோரின் கூட்டு முயற்சியினால் நேற்றைய தினம் (மே.24) முழு ஊரடங்கு மக்கள் ஒத்துழைப்புடன் வெற்றி பெற்றுள்ளது.
மக்களுக்கு வீடுகளுக்கே சென்று காய்கறிகள் விநியோகிக்கும் பணியை மாவட்ட நிர்வாகம், தோட்டக்கலைத் துறை, வியாபாரிகள் சங்கம் இணைந்து சிறப்பாக செய்து வருகின்றனர். அதனைத் தொடர்ந்து பலசரக்குப் பொருள்களையும் வீடுகளுக்குச் சென்று கொடுக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது” என்று கூறினார்.
மக்கள் இதேபோல் ஊரடங்கை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்ட அவர், காய்கறிகளின் விற்பனையில் ஏதாவது தவறு நடந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.
இதையும் படிங்க: விசாகப்பட்டினம் இந்துஸ்தான் பெட்ரோலிய ஆலையில் பெரும் தீவிபத்து