மதுரை: உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில், திருச்சியைச் சேர்ந்த உதயகுமார் என்பவர் தாக்கல் செய்த மனுவில், “திருச்சி மாவட்டம் லால்குடி ஒன்றியத்திற்கு உட்பட்ட மருதூர் கிராமத்தில் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா கிராமின் (PMAY-G) திட்டத்தின் விதிமுறைகளை முறையாக பின்பற்றாமல், அதிகாரிகள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நீலகண்டன் மற்றும் தங்கப்பொண்ணு ஆகியோருக்கு வீடுகள் ஒதுக்கீடு செய்துள்ளனர்.
இந்த நீலகண்டனின் வீட்டின் புகைப்படத்தை, தங்கபொண்ணு என்ற மற்றொரு பயனாளியின் முகவரிக்கு அதிகாரிகள் பயன்படுத்தியுள்ளனர். அந்த வீட்டின் முழு நிதியையும் பெற்று, அதிகாரிகள் முறைகேடாக பயன்படுத்தியுள்ளனர். மேலும் பயனாளி தங்கப்பொண்ணு, கடந்த 2020ஆம் ஆண்டு அக்டோபரில் இறந்துவிட்டார்.
ஆனால், யூனியன் அலுவலக அதிகாரிகள் அவர் உயிருடன் இருப்பது போன்று போலியான கைரேகை அடையாளத்துடன், அவருடைய ஒப்புதலை உருவாக்கி, மரணமடைந்தவர் 2022 ஜூலையில் யூனியன் அலுவலகத்திற்கு நேரில் வந்ததாக பதிவுகளில் காட்டியுள்ளனர். எனவே, பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் பல லட்சம் ரூபாய் முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்யவும், ஊழல் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.
இந்த மனுவை ஏற்கனவே கடந்த பிப்ரவரி மாதம் விசாரித்த நீதிபதிகள், தமிழக முதன்மை செயலரின் கடிதத்தின் அடிப்படையில்,
திருச்சி மாவட்ட ஆட்சியர் விசாரனை அலுவலர்களை நியமிக்க வேண்டும். பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா கிராமின் திட்டத்தின் கீழ் முறைகேடு செய்த லால்குடி பஞ்சாயத்து அலுவலர்கள் மீது திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், குற்றவியல் நடவடிக்கையை எடுக்க வேண்டும் எனக் கூறி, வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.
நீதிமன்றம் உத்தரவிட்டும், இதுவரை சம்பந்தப்பட்ட அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி, திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரி மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், விக்டோரியா கவுரி அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசுத் தரப்பில், வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாக வாதிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து நீதிபதிகள், "பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டம் ஏழை மக்களுக்கு பயன் தரக்கூடிய திட்டம். இந்த திட்டத்தின் நோக்கம் முழுமையாக சிதைக்கப்பட்டுள்ளது. மக்களுக்கு வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு நடைபெறுவதை அனுமதிக்க முடியாது.
ஏற்கனவே உயர் நீதிமன்றம் தொடர்புடைய அதிகாரிகள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டும், மாவட்ட ஆட்சியர் முறைகேடு குறித்து அறிக்கை அளித்த பின்பும் கூட, தொடர்புடைய அதிகாரிகள் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்ய தாமதித்திருப்பது நீதிமன்ற அவமதிப்பாகும்.
இந்தத் திட்டத்தை கண்காணிக்க வேண்டிய திருச்சி மாவட்ட ஆட்சியர் முறையாக கண்காணிக்கவில்லை, அதிகாரிகளும் மெத்தனப்போக்கில் இருந்துள்ளனர். சம்பந்தப்பட்ட பகுதியில் இந்த ஒரு வீட்டில் மட்டும் முறைகேடு நடந்துள்ளதா அல்லது முழு திட்டத்திலும் முறைகேடு நடந்துள்ளதா என நீதிமன்றத்திற்கு சந்தேகம் வருகிறது.
காவல்துறையின் நடவடிக்கையிலும் சந்தேகம் எழுகிறது. கடைநிலை ஊழியர் மீது வழக்குப் பதிந்த காவல்துறை, ஏன் உயர் அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்யவில்லை? இது போன்ற முறைகேட்டில் ஈடுபடும் அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
அரசின் ஒரு திட்டத்தில் முறைகேடு நடந்தால், உயர் அதிகாரிகள் முதல் கடை நிலை ஊழியர் வரை, அதில் பங்கு இருக்கும் அனைவரும் விசாரிக்கப்பட வேண்டும். இது குறித்து திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும், இந்த வழக்கில் திருச்சி லஞ்ச ஒழிப்பு பிரிவு டிஎஸ்பியை எதிர் மனுதாரராக சேர்த்து உத்தரவிடப்படுகிறது.
பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக உரிய விசாரணை நடைபெற வேண்டும். இந்த வழக்கை சமயபுரம் காவல் நிலைய ஆய்வாளர், அவசரம் அவசரமாக கடைநிலை ஊழியர்கள் மீது வழக்குப் பதிந்து வழக்கை முடிக்க நினைக்கிறார், இது கண்டனத்துக்குரியது.
எனவே, இந்த முறைகேட்டில் தொடர்புடைய ஒவ்வொரு அதிகாரி மீதும் வழக்குப் பதிவு செய்து, உரிய குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதில் தவறும் பட்சத்தில் இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட நேரிடும்" என்று எச்சரித்த நீதிபதிகள் வழக்கை 28ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: விரைவில் எம்பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்கை விசாரிக்க சிறப்பு அமர்வு.. சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு!