மதுரை செல்லூர் ரவுண்டானாவில் ரூ.66 லட்சம் செலவில் அமையவுள்ள கபடி வீரன் சிலை கட்டுமானப் பணிகளை கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ இன்று பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், "கூடைப்பந்தாட்டத்திற்கு அமெரிக்காவில் உள்ள பாஸ்டன் நகரத்திலும், டென்னிஸ் விளையாட்டிற்கு நியூயார்க்கிலும், தடகளத்திற்கு இங்கிலாந்திலும், கால்பந்தாட்டத்திற்கு சேலம் - ஏற்காட்டிலும் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதேபோன்று கபடி வீரர்களுக்காக மதுரை செல்லூர் ரவுண்டானாவில் சிலை அமைக்கப்பட உள்ளது" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "ஒவ்வொரு கட்சிக்கும் ஒருவிதமான செயல்திட்டம் இருக்கிறது. அதன் அடிப்படையில் அவர்கள் தங்கள் கட்சியை வளர்க்க பேசுவார்கள். அதேபோன்று பாஜக தலைவர்களும் பேசுகிறார்கள். ஜனநாயக அமைப்பில் அதில் ஒன்றும் பிழையில்லை. அதிமுக தலைமையிலான அரசு எப்போதும் எதிர்க்கட்சிகளுக்கு உரிய பாதுகாப்பும் அங்கீகாரமும் அளிக்கிறது. ஆனால் திமுக ஆட்சிக்காலத்தில் அவ்வாறு நடைபெற்ற வரலாறு இல்லை" என்று தெரிவித்தார்.
எழுவர் விடுதலை: 'நீதிமன்றம் விடுவித்தால் ஆட்சேபனை இல்லை' - கே.எஸ். அழகிரி
மேலும் பேசிய அவர், "கடந்த பத்தாண்டுகளாக தமிழ்நாடு அமைதிப் பூங்காவாக திகழ்கிறது. தற்போது அரசியல் கட்சித் தலைவர்களை நேரடியாகத் தாக்குவது என்பது மற்றொரு பரிமாண வளர்ச்சியாக இருக்கிறது. இதற்கு காரணம் ஊடகங்கள்தான். ராஜபக்சே போர்க்குற்றவாளி, இலங்கை மீது பொருளாதார தடை உள்ளிட்ட தீர்மானங்கள் தொடங்கி எழுவர் விடுதலை வரை அதிமுக அரசு தொடர்ந்து இதனைச் செய்து வருகிறது. 7.5 விழுக்காடு விஷயத்தில் முதலமைச்சர் என்ன நடவடிக்கை மேற்கொண்டாரோ அதே போன்று எழுவர் விடுதலையிலும் சரியான நடவடிக்கையை மேற்கொள்வார். வேளாண் அமைச்சர் துரைக்கண்ணுவின் இறப்பு சம்பவத்தை எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் அரசியலாக்குவது அழகல்ல" என்று கூறினார்.