மதுரை: லண்டனில் உள்ள பென்னிகுயிக் நினைவிடத்தை பார்வையிட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில், "ஐந்து மாவட்ட மக்களால் போற்றப்படக்கூடிய ஒரு அற்புதமானத் தலைவர் தான் பென்னி குயிக், அவருடைய முயற்சியால் முல்லைப் பெரியாறு அணை கட்டப்பட்டது.
இந்த நிலையில் லண்டனில் உள்ள அவரது கல்லறையை காண்கின்ற வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அதற்கு இறைவனுக்கும், அதிமுக பொதுச்செயலாளருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். தமிழகத்தில் இன்றைக்கு ஆட்சியில் இருக்கிற திராவிட முன்னேற்ற கழக அரசு இந்த கல்லறையை சீரமைத்து கொடுப்பதாக உறுதிமொழி அளித்தது.
ஜான் பென்னி குயிக் சிலையை அமைத்து அதற்கான பணத்தை வாங்கி அவர்கள் கட்டவில்லை என்ற குற்றச்சாட்டை தேவாலயத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் கூறியபோது மிகப்பெரிய மன வேதனை ஏற்பட்டது. தென் மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தை உருவாக்கிக் கொடுத்தவருக்கு இப்படிப் பட்ட ஒரு நிலையை எண்ணிப் பார்க்கின்ற பொழுது மிக வருத்தமாக உள்ளது.
திமுக அரசு பராமரிக்கவில்லை என்றால் அதிமுக பொதுச்செயலாளரிடம் இதனை எடுத்துச் சொல்லி நானே முன்வந்து அவருடைய கல்லறையை சீரமைப்பதற்கும், அவருடைய சிலைக்கான பராமரிப்புத் தொகையை செலுத்துவதற்கு முயல்வேன். அதற்காக என்ன செய்ய வேண்டும் என்பதை அதிமுக பொதுச் செயலாளரிடம் பேசி அந்த பணியை செய்வேன்" என்று அந்த வீடியோவில் பேசி உள்ளார்.
இதையும் படிங்க:அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு.. மருத்துவ அறிக்கை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு!