ஜப்பானின் டோக்கியோ நகரில் இந்த ஆண்டு ஜூலை 23ஆம் தேதி தொடங்கி, ஆகஸ்டு 5ஆம் தேதி வரை ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ளன. இந்த ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்ளும் இந்திய வீரர்களை உற்சாகப்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுக்குமாறு மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
அதில் ஒரு முக்கிய அம்சமாக மொபைல் போன் மூலம் படம் எடுத்துக் கொள்ளும் செல்ஃபி தளங்களை முக்கிய இடங்களில் அமைக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. ரயில்வே துறையின் பல்வேறு விளையாட்டு வீரர்கள் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க உள்ள நிலையில், இதுபோன்ற செல்ஃபி தளங்கள் குறிப்பாக ரயில் நிலையங்களில் நிறுவப்பட உள்ளன.
அந்த வகையில் ஒலிம்பிக் 400 மீட்டர் தடகள தொடர் ஓட்டப் போட்டியில் பங்கேற்கும் மதுரை ரயில்வே ஊழியர் ரேவதி வீரமணியை ஊக்குவிக்கும் வகையில் அவரது பெயர் தாங்கிய செல்ஃபி தளம் மதுரை ரயில் நிலையத்தில் நிறுவப்பட்டது. இந்த செல்ஃபி தளத்தை ரயில்வே அலுவலகத்தில் மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் வி.ஆர்.லெனின் தொடக்கி வைத்தார்.
ரயில் நிலையங்களில் வைக்கப்படும் செல்ஃபி தளங்களில் ரயில் பயணிகள் தங்களது தனி படங்களை எடுத்து அவற்றை சமூக வலைத்தளங்களில் #Cheer4India குறியீடுடன் வெளியிட்டு விளையாட்டு வீரர்களை உற்சாகப்படுத்தலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஒலிம்பிக் வீரர்களிடம் உரையாடும் மோடி!