மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த சீமான், கிரண்பேடிக்கு ஆளுநர் பதவி கொடுக்கப்பட்ட நிலையில் கட்சியில் நீண்டகாலம் பாடுபட்டு உழைத்த தமிழிசைக்கு வழங்கியிருப்பது மகிழ்ச்சிதான், இது வரவேற்கத்தக்கது என்றார். இதே போல் பொன். ராதாகிருஷ்ணன், சி.பி. ராதாகிருஷ்ணன் ஆகியோரையும் மத்திய அமைச்சரவையில் இடம்பெறச் செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தார்.
லாபத்தில் இயங்கி வரும் வங்கிகளை நஷ்டத்தில் இயங்கும் வங்கிகளுடன் இணைப்பதிலிருந்து அனைத்தும் திவாலாகிவிட்டது என்பது தெளிவாக தெரிகிறது என்றும் தற்போதைய நிலையில் பாஜகவிற்கு நாட்டின் பொருளாதாரம், தொழில்துறை வளர்ப்பு போன்றவற்றில் அக்கறை ஏதும் இல்லை எனவும் சாடினார்.
குற்றம் யார் மீது இருந்தாலும் விசாரிப்பது என்பது காங்கிரஸ் ஆட்சியின்போது பாஜகவினரையும், பாஜக ஆட்சியின்போது காங்கிரஸாரையும் மாறிமாறி விசாரணை வழக்குப்பதிவு என்பதெல்லாம் இயல்புதான், இவர்களின் சண்டையை ரசிக்க வேண்டியது தான் என்றும் கேலி செய்தார்.
இதற்கு பிறகும் மன்மோகன் சிங் கூறியதை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஏற்றுக் கொள்ள முடியாது என்று கூறுவது ஏற்புடையதல்ல என்றும் அதனால் தானாக வந்து பத்திரிகையாளர்களை சந்தித்து சமாளிக்க முயற்சி செய்து வருகின்றனர் என்றும் தெரிவித்தார். மிகப்பெரிய பொருளாதார வீழ்ச்சியை நாடு சந்தித்துள்ளதாகவும், அதிலிருந்து எவ்வாறு மீண்டு வருவது என்பது குறித்துதான் யோசிக்க வேண்டும் என்றும் கூறினார்.
தேர்தலில் போட்டியிடாத நிர்மலா சீதாராமனுக்கு அமைச்சரவையில் இடம் வழங்கப்பட்டுள்ளது. அரசியலிலேயே இல்லாத ஜெய்சங்கருக்கு வெளியுறவுத்துறை அமைச்சர் வழங்கப்பட்டுள்ளது. இதனால் நிச்சயமாக தமிழர்களுக்கு அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும் என்றும் பாஜக தமிழர்களுக்கு அங்கீகாரம் வழங்க வேண்டும், இல்லையென்றால் இன்னும் கடினமான தோல்வியை சந்திக்க நேரிடும் என்றார்.