திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்த பெரியசாமி என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், ”நான் பழனியில் உள்ள தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் முடி இறக்கும் தொழில் செய்துவருகிறேன். தற்போது என்னுடன் 300க்கும் மேற்பட்டவர்கள் இந்தத் தொழிலில் ஈடுபட்டுவருகின்றனர்.
தைப்பூசம், பங்குனி உத்திரம் போன்ற திருவிழாக் காலங்களில் மட்டுமே எங்களுக்கு வேலை அதிகமாகக் கிடைக்கும். இதில் ஒரு நபருக்கு முடி இறக்குவதற்கு எங்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் 25 ரூபாய் மட்டுமே வழங்கப்பட்டு வந்தது. ஆனால், தற்போது கரானா காலம் என்பதால் கோயில் அடைக்கப்பட்டு 100 நாள்களுக்கு மேல் ஆகிவிட்டன.
இந்தக் காலங்களில் வேலை எதுவும் இல்லாமல் மிகவும் சிரமப்பட்டுவருகிறோம். கோயில் நிர்வாகம் சார்பில் எங்களுக்கு சம்பளம், நிவாரணம் உள்ளிட்ட எதுவும் வழங்கப்படாமல் உள்ளது. எனவே, இந்தக் கரோனா காலத்தைப் பேரிடர் காலமாகக் கருதி வேலையிழந்துள்ள எங்களுக்கு வங்கிகள் மூலம் 50 ஆயிரம் ரூபாய் கடன் வழங்க வேண்டும். தினமும் 600 ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும்.
இதுகுறித்து அறநிலையத் துறை அலுவலர்களிடம் முறையிட்டும் எவ்வித பலனுமில்லை. எனவே நீதிமன்றம் தலையிட்டு நிவாரணம் வழங்க உத்தரவிட வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வழக்கு இன்று (ஜூலை 13) நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், தமிழ்நாட்டில் உள்ள சிறிய கோயில்கள் திறக்கப்பட்டுவிட்டன என தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, நீதிபதிகள் மனுதாரரின் கோரிக்கை குறித்து வருவாய்த் துறையின் கூடுதல் செயலாளர் மற்றும் ஆணையர், அறநிலையத் துறை ஆணையர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வரும் ஜூலை 29ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.