மதுரை: மதுரை மாவட்டம், மேலூரைச் சேர்ந்த முருகேசன் என்பவர் கடந்த 23ஆம் தேதி, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு ஒன்றைத் தொடர்ந்திருந்தார். அதில், "மதுரை மாவட்டம், மேலூர், திருவாதவூர் கிராமத்தில் கடந்த 15ஆண்டுகளாக ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டு திருவாதவூரில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த அனுமதி கோரி, மதுரை மாவட்ட ஆட்சியர், திருவாதவூர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் ஆகியோருக்கு மனு அளிக்கப்பட்டது.
சட்டம் ஒழுங்கு பிரச்னையை காரணம் காட்டி திருவாதவூர் காவல் துறையினர் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கு அனுமதி அளிக்கவில்லை. எனவே, திருவாதவூர் ஜல்லிக்கட்டு போட்டிக்கு அனுமதி மறுத்து காவல் துறையினர் அனுப்பிய நோட்டீசை ரத்து செய்து, ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி வழங்க வேண்டும்" என கோரியிருந்தனர்.
இந்த மனு நீதிபதிகள் கிருஷ்ணகுமார், விஜயகுமார் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மதுரையைப் பொறுத்தவரை அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவது தொடர்பாக மட்டுமே அரசாணை உள்ளது என்றும், மற்ற ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவதற்கு சம்மந்தப்பட்ட மாவட்ட ஆட்சியரிடம் உரிய அனுமதி பெற வேண்டும் எனவும் அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.