இது குறித்து அவர் கூறியதாவது: மதுரை சித்திரைத் திருவிழாவின் இறுதி நாட்களான ஏப்ரல் 17, 18, 19 ஆகிய மூன்று தினங்களில் பல லட்சம் பேர் கூடுவர். இதை கருத்தில்கொண்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக 200 காவலர்களை கொண்ட 40 சிறப்பு குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து தேர் சுற்றி வரும் நான்கு மாசி வீதிகளிலும் 150 சுழலும் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
கள்ளழகர் மதுரைக்குள் நுழையும் புதூர் முதல் வைகை ஆறு கரை வரை 200 கேமராக்கள் பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மக்கள் அதிகம் கூடும் பகுதியான கோரிப்பாளையம், தேவர் சிலை, அழகர் வைகை ஆற்றில் இறங்கும் இடம் ஆகிய இடங்களில் பறக்கும் கேமரா மூலம் கண்காணிக்கப்படும். மேலும் விழாவின்போது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆண், பெண் கொள்ளையர்களின் புகைப்படங்களை அச்சிடப்பட்டு ஆங்காங்கே தகவல் பலகைகள் மூலம் ஒட்ட திட்டமிட்டுள்ளோம்.
மூன்று நாட்களும் 24 மணி நேரமும் செயல்படும், 50 இருசக்கர ரோந்து வாகனங்கள், சாதாரண உடையில் காவலர்கள் ரோந்து, மரத்தாலான தடுப்பு வேலிகள் உள்ளிட்டவைகளும் மேற்கொள்ளவுள்ளோம். மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளதால், வாக்காளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு எந்தவித இடையூறும் ஏற்படாத வகையில் பாதுகாப்பு அளிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.