மதுரை மாவட்டத்தில் கடந்த டிசம்பர் 27ஆம் தேதி நடைபெற்ற முதல்கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் மதுரை கிழக்கு, மேற்கு, மேலூர், கொட்டாம்பட்டி, வாடிப்பட்டி, அலங்காநல்லூர் ஆகிய ஆறு ஒன்றியங்கள் இடம்பெற்றன. இதில் மொத்தம் 77.14 சதவிகித வாக்குகள் பதிவாகின. 5 லட்சத்து 9 ஆயிரத்து 428 பேரில் 3 லட்சத்து 92 ஆயிரத்து 992 பேர் வாக்களித்திருந்தனர்.
இந்நிலையில் மீதமுள்ள திருப்பரங்குன்றம், உசிலம்பட்டி, செல்லம்பட்டி, சேடபட்டி, திருமங்கலம், டி.கல்லுப்பட்டி மற்றும் கள்ளிக்குடி ஒன்றியங்களுக்கு இரண்டாம் கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் விறுவிறுப்புடன் தொடங்கியுள்ளது.
பதற்றமுள்ள வாக்குச்சாவடிகள் எனக் கண்டறியப்பட்ட 220 இடங்களில் 94 வீடியோ கேமராக்களும் 60 வெப் கேமராக்களும் நுண் பார்வையாளர்கள் 56 பேரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட உள்ளனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் தலைமையில் 2 ஆயிரம் காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இரண்டாம் கட்டமாக நடைபெறவுள்ள ஊரக உள்ளாட்சித் தேர்தலில் மொத்தம் 1,576 பதவிகளுக்கு 4 ஆயிரத்து 652 போட்டியிடுகின்றனர்.