மதுரை: விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்புப் பகுதியைச் சேர்ந்த ராஜகோபால் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுவினைத் தாக்கல்செய்திருந்தார். அதில், "சதுரகிரியில் உள்ள சுந்தரமகாலிங்க சுவாமி திருக்கோயில் மிகவும் பிரபலமானது. சுமார் 520 ஆண்டுகளாக சாலியர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஆனந்தவள்ளி அம்மன் கொலு மண்டபத்தில் நடைபெறும் நிகழ்வுகளில் பங்கேற்பர்.
தற்போது கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக கோயில் திருவிழாக்களை நடத்தவும், அவற்றில் பொதுமக்கள் பங்கேற்கவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. சுந்தர மகாலிங்க கோயிலில் நாள்தோறும் பூஜைகள் நடத்தப்படும் நிலையில், பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவதில்லை.
கடந்த ஆண்டு உரிய அனுமதியுடன் 250 பேர் விழாவில் பங்கெடுத்தனர். அதேபோல இந்த ஆண்டும் தடுப்பூசி இரண்டு டோஸ்களையும் செலுத்திக் கொண்டவர்களில், ஒரு கிராமத்திற்கு ஐந்து பேர் என 35 பேரை அனுமதிக்கக் கோரி மனு அளித்தும் எவ்வித பதிலும் இல்லை.
ஆகவே ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சுந்தரபாண்டியம், அருப்புக்கோட்டை, சக்கம்பட்டி, புத்தூர், சத்திரப்பட்டி ஆகிய ஏழு கிராமங்களிலிருந்தும் ஐந்து பேர் என 35 பேரை சுந்தரமகாலிங்கம் கோயில் ஆனந்தவள்ளி மண்டபத்தில் அக்டோபர் 14, 15ஆம் தேதிகளில் நடைபெறும் கொலு, பூஜை நிகழ்வுகளில் பங்கேற்க அனுமதிக்க உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி தமிழ்ச்செல்வி முன்பாக விசாரணைக்கு வந்தது. அரசுத் தரப்பில், வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் வழிபாட்டுத் தலங்களில் பொதுமக்கள் அனுமதிக்கப்படுவதில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதி மனுதாரரின் மனுவைப் பரிசீலித்து சட்டத்துக்குள்பட்டு உரிய நடவடிக்கை எடுக்க அரசிற்கு உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தார்.
இதையும் படிங்க: தனியார் பள்ளிகளுக்கு நிதி வழங்க வேண்டும்