ஜெயராஜ், பென்னிக்ஸ் கொலை வழக்கில் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் பணியாற்றிய சிறப்பு சார்பு ஆய்வாளர் பால்துரை உட்பட 10 காவல் துறையினர் கைதுசெய்யப்பட்டு, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். கடந்த 24ஆம் தேதி கரோனாவால் பாதிக்கப்பட்ட பால்துரை மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்தச் சூழலில், பால்துரை இன்று (ஆகஸ்ட் 10) அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுதொடர்பாகச் செய்தியாளர்களிடம் பேசிய அவரது மகன் பிரவான், "சாத்தான்குளம் விவகாரத்தில் எனது தந்தை பால்துரையைக் கடைசி நேரத்தில்தான் விசாரணைக் கைதியாகச் சேர்த்தனர்.
கைதாகும்போது அவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். முதலில் மாரடைப்பு ஏற்பட்டு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட அவர், பின்னர் கரோனாவால் பாதிக்கப்பட்டார். அப்போது, அவருக்கு சர்க்கரையின் அளவு அதிகரித்ததால் சுயநினைவை இழந்தார். இதனால், அவர் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார்.
போதுமான கவனிப்பு மருத்துவமனையில் அளிக்கப்படாத காரணத்தால் கடந்த ஆகஸ்ட் 8ஆம் தேதி மதுரை மாநகரக் காவல் ஆணையரிடம் தனியார் மருத்துவமனைக்கு அவரை மாற்றக்கோரி எனது தாயார் மனு அளித்தார். அதன்பிறகு கூடுதல் கவனம் எடுத்துச் சிகிச்சை அளிக்கப்பட்டது.
இருப்பினும், சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்தார். கரோனாவால் உயிரிழந்ததால் உடலை எங்களிடம் கொடுக்க மறுக்கின்றனர். தமிழ்நாடு அரசு காவல் துறையில் 34 ஆண்டுகள் பணி செய்த எனது தந்தையின் உடலை முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்ய வேண்டும் என்பதுதான் எங்கள் வேண்டுகோள். சிபிஐ எங்களின் வேண்டுகோளை ஏற்க வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க: சாத்தான்குளம் ஆய்வாளரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்க கோரி மனு!