தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியை சேர்ந்த வியாபாரிகள் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் சாத்தான்குளம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு கோவில்பட்டி சிறையில் அடைக்கப்பட்டு மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
விசாரணைக் கைதிகளாக சிறையில் அடைக்கப்பட்ட தந்தை மகன் இருவரும் காவல்துறையினரால் அடித்து துன்புறுத்தப்பட்டதே அவர்களது இறப்புக்கு காரணம் என கூறப்படுகிறது.இது குறித்து உயர் நீதிமன்ற மதுரைக்கிளை தாமாக முன்வந்து வழக்கு விசாரணை நடத்தி வருகிறது.
தற்பொழுது இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் சிபிசிஐடி காவல்துறையினர் முதற்கட்டமாக கொலை வழக்காக எப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளனர்.
இதில் காவல் நிலைய எஸ்.ஐ.க்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன், போலீசார் முருகன், முத்துராஜ் ஆகிய நான்கு பேர் மீது 302 உட்பட இரண்டு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதில் எஸ்.ஐ.ரகு கணேஷ் நேற்று கைது செய்யப்பட்டு, தூத்துக்குடி மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர் படுத்தப்பட்டு, நேற்றிரவே தூத்துக்குடி சிறையில் அடைக்கப்பட்டார். மற்றொரு எஸ்.ஐ.யான பாலகிருஷ்ணன் தலைமறைவாகி விட்டதாக தெரிகிறது.
தொடர்ந்து இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், போலீசார் முருகன், முத்துராஜ் ஆகியோரிடம் சி.பி.சி. ஐடி. காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.
இந்த விவரங்களை சி.பி.சி.ஐ.டி காவல்துறையினர் உயர் நீதி மன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், பி.புகழேந்தி அமர்வில் முதற்கட்டமாக தெரிவிக்க வாய்ப்புள்ளது.