சாத்தான்குளம் தந்தை - மகன் சித்தரவதை கொலை விவகாரத்தில் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் வழக்கின் விசாரணையை சிபிஐ நடத்தி வருகிறது.
இந்த நிலையில் இதுதொடர்பான வழக்கு இன்று உயர்நீதி மன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது, சிபிஐ தரப்பில் இரண்டாவது இடைக்கால நிலை அறிக்கையை தாக்கல் செய்யப்பட்டது.
அதில் மத்திய தடயவியல் துறை வல்லுநர்கள் தந்தை மகன் இறப்பு குறித்த தடயங்களை ஆய்வு செய்து வருகின்றது. இவர்கள் தான் நடிகர் சுஷாந்த் சிங் சம்பந்தமான இறப்பு குறித்த தடயங்களை சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கில் மதுரையைச் சேர்ந்த மருத்துவர் மதிகரன் என்பவர், மேலும் சில பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என மனு தாக்கல் செய்திருந்தார். அதனை ஏற்றுக்கொண்டு அவரை எதிர் மனுதாரராக நீதிபதிகள் இணைத்துக் கொண்டனர்.
இதேபோல் சாத்தான்குளம் காவல் துறையினரால் தாக்கப்பட்டு கோவில்பட்டி சிறையிலுள்ள ராஜாசிங் என்பவருடைய வழக்கு விசாரணையின் இடைக்கால அறிக்கையையும் சிபிசிஐடி காவல் துறையினரால் தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையில் வழக்கு குறித்து 22 சாட்சிகளிடம் விசாரித்து இருப்பதாகவும், 12 ஆவணங்களை பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தனர்.
பின்னர் இந்த வழக்கின் விசாரணை செப்டம்பர் 22ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இதையும் படிங்க: 'அன்று ஆசிரியரிடம் அடி வாங்கியதால் தான் இன்று அறிவோடு பேசுகிறேன்': ராஜேந்திர பாலாஜி!