மதுரை: சாத்தான்குளத்தைச் சேர்ந்த செல்வராணி என்பவர் உயர் நீதிமன்றம் மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெறும் சாத்தான்குளம் தந்தை ஜெயராஜ், அவர் மகன் பென்னிக்ஸ் உயிரிழந்த வழக்கு விசாரணையை கீழமை நீதிமன்றத்தில் விரைவாக நடத்தி முடிக்க உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி, வழக்கு விசாரணையை கீழமை நீதிமன்றத்தில் ஆறு மாதத்திற்குள் நடத்தி முடிக்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி கடந்த மார்ச் மாதம் உத்தரவிட்டிருந்தார்.
இந்த நிலையில் கரோனா ஊரடங்கு உள்ளிட்ட காரணங்களால், வழக்கு விசாரணையை ஆறு மாதத்திற்குள் நடத்தி முடிக்க இயலவில்லை. விசாரணையை விரைந்து முடிக்க மேலும் கால அவகாசம் வழங்க வேண்டும் என மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் அமா்வு நீதிமன்றம் சார்பில் மனு தாக்கல்செய்யப்பட்டது.
இந்த வழக்கு இன்று (டிசம்பர் 17) சென்னை உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை நீதிபதி முரளிசங்கர் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கின் விசாரணை நீதிபதி சார்பில் அறிக்கை தாக்கல்செய்யப்பட்டது.
அதில், வழக்கு தொடர்பாக கைப்பற்றப்பட்ட செல்போன் உள்ளிட்ட பொருள்களைத் தடய அறிவியல் பரிசோதனைக்கு குஜராத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. இதன் அறிக்கைக்காகக் காத்திருக்கிறோம். சாட்சிகளிடம் விசாரணை நடைபெற்றுவருகிறது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதைத் தொடர்ந்து நீதிபதி, சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை குறித்த வழக்கை ஐந்து மாதங்களில் விசாரித்து முடிக்க மதுரை மாவட்ட நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: பள்ளி விபத்து: விசாரணை வளையத்திற்குள் தாளாளர், நிர்வாகிகள்?