மதுரை: சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தந்தை, மகன் தாக்கப்பட்டு உயிரிழந்த வழக்கில், ஆய்வாளர் ஸ்ரீதர் ஜாமீன் கோரிய வழக்கை செப்டம்பர் 8 ம் தேதிக்கு தள்ளிவைத்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு.மேலும் வழக்கின் விசாரணையின் தற்போதைய நிலை குறித்து தாக்கல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் கடந்த 2020 இல் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட தந்தை ஜெயராஜ், மகன் பெனிக்ஸ் ஆகியோர் போலீஸாரால் கடுமையாக தாக்கப்பட்டதில் உயிரிழந்தனர். இந்த வழக்கில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ், தலைமை காவலர்கள் முருகன், சாமிதுரை, காவலர்கள் முத்துராஜா, செல்லத்துரை, தாமஸ் பிரான்சிஸ், வெயில்முத்து ஆகியோரை சிபிஐ காவல்துறை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு மதுரை முதலாவது நீதிமன்றத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் ஸ்ரீதர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது, இந்த வழக்கில் கடந்த 3 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டு உள்ளதாகவும். தந்தை, மகன் இறப்புக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை. தற்போது உடல் நலக்குறைவு காரணமாக சிரமப்பட்டு வருவதாகவும், தனியார் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற வேண்டும். எனவே தனக்கு பிணை வழங்கி உத்தர விட வேண்டும் என அந்த மனுவில் கோரியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கே. இளங்கோவன், சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றதில் தற்போது தான் நீதிபதி நியமிக்கப்பட்டு வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது, 3 மாதத்தில் நீதிமன்ற விசாரணை முடிவடைந்துவிடும் என தெரிவிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து வழக்கில் தற்போதைய நிலை குறித்து பதில் மனுவாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு செப்டம்பர் 9 ம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.
இதையும் படிங்க:மதுபானக்கடைகளை மூடும் உத்தரவை எதிர்த்து புதுச்சேரி அரசின் மறுசீராய்வு மனு - உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்பு!