காந்தியம் தொடர்பான பணிகளில் மிகுந்த அக்கறையோடு இயங்கி வந்த மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகச் செயலாளரும் சர்வோதய இயக்கத் தலைவருமான கா.மு. நடராஜன்(89) கரோனா தொற்று காரணமாக கடந்த மே 19ஆம் தேதி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று நள்ளிரவு கடும் மூச்சுத் திணறல் ஏற்பட்டு இன்று அதிகாலை உயிரிழந்தார்.
மறைந்த கா.மு. நடராஜன் கிராம ராஜ்ஜியம் மற்றும் சர்வோதயம் இதழ்களுக்கு ஆசிரியராகப் பணியாற்றியதுடன் காந்தி நினைவு நிதியின் தலைவராகப் பொறுப்பிலிருந்து வந்தார். வினோபா பாவேயின் பூமிதான இயக்கத்தில் பங்கேற்று, நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஏழை, எளிய மக்களுக்கு நிலங்களை தானம் வழங்கியதில் பெரும் பங்காற்றியவர்.
காந்தியம் சார்ந்த பல்வேறு பயிற்சிகளுக்காகவும், கருத்தரங்குகளுக்காகவும் வெளிநாடுகள் சென்று காந்தியக் கொள்கைகளைத் தொடர்ந்து பரப்பி வந்தவர். காந்தியக் கொள்கைகளின் மீது ஆழ்ந்த பற்றும் உறுதியும் கொண்டவர்.
இவரின் மறைவிற்குப் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: முழு ஊரடங்கில் ரேஷன் கடைகள் செயல்பட அனுமதி!