மதுரை விமான நிலையத்தில் சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர்கள் நடிகர் சங்கத் தேர்தலில் ஆதரவு குறித்து கேட்டபோது சரத்குமார், தேர்தல் என்றால் இரு அணிகளும் இருக்கத்தான் செய்யும். என்னைதான் நடிகர் சங்க உறுப்பினர்களிலிருந்து நீக்கிவிட்டார்களே... தேர்தல் பற்றி நான் கருத்து கூற விரும்பவில்லை. ஒரே அணியில் இருந்தவர்கள் தற்போது இரண்டு அணியாக பிரிந்துள்ளனர்.
சங்கத்தின் செயல்பாடு சிறப்பாக இருக்க வேண்டும்; சங்கத்தின் கட்டடம் கட்ட வேண்டிய எண்ணம்தான் எல்லோருக்கும் இருக்கிறது. ஒற்றுமை என்பது இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் சங்கம் உருவாக்கப்பட்டது. அனைவரும் ஒற்றுமையாக செயல்பட்டால் சிறப்பாக இருக்கும் என்பது எனது கருத்து என்று அவர் தெரிவித்தார்.
பின் செய்தியாளர்கள் உள்ளாட்சித் தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சியின் நிலைப்பாடு குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், உள்ளாட்சித் தேர்தல் அறிவித்த பின் தனது நிலைப்பாட்டை கூறுவதாகத் தெரிவித்தார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், தண்ணீர் பிரச்னையைப் பொறுத்தவரை எதிர்க்கட்சி ஆளும் கட்சி என்பது கிடையாது; இது மக்களின் பிரச்னை என்றார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இருந்தபோது மழை நீர் சேகரிப்பு கண்டிப்பாக இருக்க வேண்டும் என கூறினார். அதை கடுமையாக தொடர்ந்து செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் எனக் குறிப்பிட்ட அவர், தற்போது மழைநீர் சேகரிப்பு செயல்பாடுகள் குறைந்துள்ளதாகத் தெரிவித்தார்.