மதுரை: திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த குமார் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், "நெல்லை தருவைகுளம் அருகே இயங்கி வரும் கிரஷர் யூனிட் மூடியதை ரத்து செய்ய வேண்டும். மேலும் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை திரும்ப ஒப்படைக்க உத்தரவிட வேண்டும்” என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கு முன் இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, மணல் குவாரி மற்றும் மணல் திருட்டில் ஈடுபடும் லாரிகள் பறிமுதல் செய்யும்போது, அது குறித்த வழக்குகளை விசாரித்து வழக்கு நடத்தும் அதிகாரம் வருவாய்த்துறைக்கு உள்ளதா அல்லது காவல் துறையினருக்கு உள்ளதா என்ற கேள்வி எழுந்தது.
இதனைத் தொடர்ந்து இந்த வழக்கு 3 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றம் செய்து நிர்வாக நீதிபதி உத்தரவிட்டார். இந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் சுவாமிநாதன், தண்டபாணி மற்றும் முரளி சங்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் தரப்பில், "மணல் கடத்திச் செல்லும்போது பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் குறித்து விசாரிப்பதற்கு காவல் துறையினருக்கு அதிகாரம் இல்லை. எங்களுடைய நிறுவனத்தில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை திரும்ப ஒப்படைக்க உத்தரவிட வேண்டும்" என தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "இந்த மணல் கடத்தலில் ஈடுபடும் வாகனங்களை விசாரிக்க காவல் துறையினருக்கு அதிகாரம் உள்ளது" என வாதிட்டார். இதனைத் தொடர்ந்து நீதிபதிகள், "மனுதாரரிடம் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை மீட்பதற்கு தொடர்புடைய சிறப்பு நீதிமன்றத்தை அணுகி நிவாரணம் பெறலாம். இந்த வழக்கு இங்கு நிலுவையில் உள்ளது என்பதற்காக, சிறப்பு நீதிமன்றம் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.
சட்டப்படி நீதிமன்றம் உரிய உத்தரவு பிறப்பிக்கலாம். மேலும் மணல் கடத்தல் வழக்குகளில் தொடர்புடைய வாகனங்களை பறிமுதல் செய்த பிறகு, அதை விசாரிக்கும் அதிகாரம் காவல் துறைக்கு உள்ளதா அல்லது வருவாய்த்துறைக்கு உள்ளதா என்பது குறித்து விரிவான விவாதத்திற்காக வழக்கு விசாரணை ஒத்தி வைக்கப்படுகிறது" என்று கூறி உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: ‘குரூப் 2 தேர்வு குளறுபடிக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை’ - தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர்