மதுரை நாடாளுமன்றத்தொகுதி திமுக கூட்டணி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சு.வெங்கடேசனை ஆதரித்து திரைப்பட நடிகரும், இயக்குநருமான சமுத்திரக்கனி செல்லூரில் தேர்தல் பரப்புரை செய்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சமுத்திரக்கனி,
"எழுத்தாளர் சு.வெங்கடேஷ் என்னுடைய நண்பர் என்ற முறையில் மட்டுமே அவருக்கு ஆதரவு தெரிவித்து வாக்கு சேகரிக்க வந்திருக்கிறேன். காவல் கோட்டம் மூலமாக மதுரையின் வரலாற்றை உலகிற்கு சொல்லியவர். மூடி மறைக்கப்பட்ட கீழடி விஷயத்தை அனைவருக்கும் எடுத்து கூறியவர்.
மக்கள் பிரச்னையை மக்கள் கூடவே இருந்து தீர்வுகாணும் எளிமையான ஒரு மனிதர். முதல் வாக்காளர்கள் தேசத்தை மாற்றக்கூடிய ஒரு இடத்தில் உள்ளனர்.
பணத்தை மட்டுமே வைத்துக்கொண்டு வெற்றிகாண முடியாது. உண்மை, நேர்மை இருக்க வேண்டும். எவ்வளவு பண வேட்டைகள் நடைபெற்றாலும் அதையெல்லாம் கடந்து சு.வெங்கடேஷ் வெற்றி பெறுவார்.
கண்டிப்பாக இளம் தலைமுறைகள் அரசியலுக்கு வருவார்கள். அதற்கு ஜல்லிக்கட்டு ஒன்றே எடுத்துக்காட்டு. சு.வெங்கடேசுக்கு திரைப்பட நடிகர்கள் ஆதரவு தெரிவிக்கிறோம் என்றால் அவருடைய திறமை மட்டும்தான். எதிரில் இருப்பவர்களை குறை கூறுவது என் நோக்கமல்ல. நோட்டாவிற்கு வாக்களித்தால் எந்த ஒரு பயனும் கிடையாது. இவரைப் போன்ற நல்ல மனிதர்களை தேடி தேடி வாக்களிக்க வேண்டும்" எனக் கூறினார்.