மதுரை அடுத்துள்ள எஸ்.எஸ். காலனியைச் சேர்ந்தவர் சிவக்குமார். இவர் தனியார் இன்சூரன்ஸ் நிறுவனமொன்றில் முகவராகப் பணியாற்றி வந்தார். கடந்த 16ஆம் தேதி அன்று வீட்டை விட்டு வெளியே வந்த இவர் வீடு திரும்பாத நிலை அவரை தேடி அவரது குடும்பத்தினர் அலைந்து வந்துள்ளனர்.
இந்நிலையில், சமயநல்லூர் அருகே உள்ள முட்புதர் நிறைந்த காட்டுப்பகுதியில் இரண்டு நாட்களுக்கு மேலாக துர்நாற்றம் வீசியதால் அக்கம்பக்கத்தினர் என்னவென்று சென்று பார்த்துள்ளார். அப்போது, அங்கு பாதி எரிந்த நிலையில் ஆணின் இறந்த உடலொன்று இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சமயநல்லூர் காவல்துறையினர், உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், இந்தச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பல்வேறு கோணங்களில் விசாரணையை மேற்கொண்டு வந்தனர். காவல் ஆய்வாளர் கண்ணன் தலைமையில் அமைக்கப்பட்ட தனிப்படையினர் நடத்திய விசாரணையில், இறந்தவர் சிவக்குமார் என்பது உறுதிசெய்யப்பட்டது.
தொடர்ந்து நடைபெற்ற மதுரையைச் சேர்ந்த விக்னேஷ் வாதிக் மற்றும் திண்டுக்கல்லைச் சேர்ந்த கணேஷ்பாபு ஆகிய இருவருக்கும் தான் கடனாக கொடுத்த 5 லட்சம் ரூபாயை சிவக்குமார் திரும்பத்தர கேட்டதால் சண்டை ஏற்பட்டிருந்தது தெரிகிறது. இதனையடுத்து, சிவக்குமாரிடம் ஆத்திரமடைந்த இருவரும் சிவக்குமாரை தொலைபேசியில் அழைத்து பணத்தைத் திருப்பிக் கொடுப்பதாக சொல்லி சமயநல்லூர் வரவழைத்து கழுத்தை நெரித்து, தலையில் கல்லை போட்டு கொலை செய்தனர். கொலையில் இருந்து தப்பிக்க இறந்த சிவக்குமாரின் உடலில் பெட்ரோல் ஊற்றி எரித்து தப்பியோடி உள்ளனர்.
காவல்துறையினரின் வேகமான செயல்பாட்டின் காரணமாக 24 மணி நேரத்தில் தப்பி ஓடிய விக்னேஷ் வாதிக், கணேஷ்பாபு ஆகிய இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட 2 பேரும் மதுரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, பின்னர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். கொடுத்த கடனை திரும்ப கேட்டதற்காக கடனளித்தவரையே பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க : பதுக்கிவைத்திருந்த 1 டன் செம்மரக்கட்டைகள் பறிமுதல்!