மதுரை: சேலம் கோகுல்ராஜ் ஆணவ கொலை வழக்கில் கைதாகி சிறையில் உள்ள சேலத்தைச் சேர்ந்த அருண் சார்பில், அவரது சகோதரர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் இடைக்கால பிணைக் கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், "கொலை வழக்கில் எனது சகோதரர் இரண்டாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். 2015ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு தற்போது வரை சிறையில் உள்ளார். எனது தந்தை லாரி ஓட்டுநர். பணி நிமித்தமாக, சேலத்தில் இருந்து அஸ்ஸாம் சென்றார்.
அங்கு திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டு அம்மாநில அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தற்போது சேலத்தில் உள்ள தனியார் புற்றுநோய் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். தற்போது எனது தந்தை உயிருக்கு ஆபத்தான நிலையில், அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய சூழல் உள்ளது.
எனவே, இந்த அறுவை சிகிச்சைக்கு தேவையான கட்டணத்தை குடும்ப சொத்து மூலமாக பணம் திரட்ட வேண்டியது உள்ளது . மேலும் எனது தந்தை உயிரோடு இருக்கும்போதே அவரை ஒருமுறை பார்த்து விட வேண்டும் என்று எண்ணுவதன் காரணமாக சிறையில் உள்ள எனது சகோதரருக்கு இடைக்கால பிணை வழங்கி உத்தரவிட வேண்டும்" என்று மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி அப்துல் குத்தூஸ் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, இடைக்கால மனு கோரி மனுதாரர் தரப்பு கூறும் தகவல் குறித்து, அரசு தரப்பு வழக்கறிஞர் உறுதி செய்து கூற உத்தரவிட்டு வழக்கு விசாரணையை அக்டோபர் 28ஆம் தேதி ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.