மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 100 வார்டுகளில் பூட்டி இருக்கும் வீடுகளை நோட்டமிட்டு மர்ம நபர்கள் தொடர்ந்து கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனைத் தடுக்க மதுரை மாநகர காவல்துறை ஆணையர் டேவிட்சன் தேவ ஆசிர்வாதம் தலைமையில் அதிரடிப்படையினர் நியமிக்கப்பட்டு ரோந்துப் பணியில் ஈடுபட்டு-வருகின்றனர். இருப்பினும் கொள்ளைச் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இந்நிலையில், 2 ஆண்டுகளில் மதுரை மாநகரில் எத்தனை வீடுகளில் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது, இதன் மூலம் பொதுமக்கள் எவ்வளவு நகைகளை இழந்துள்ளனர் என சமூக ஆர்வலர் ஒருவர் மதுரை மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்திற்கு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்டு விண்ணப்பித்திருந்தார்.
இதையடுத்து, மதுரை மாநகரக் குற்ற ஆவணக்காப்பகம் அளித்த தகவலில் , 2017ஆம் ஆண்டு மட்டும் மதுரை மாநகரில் 159 இடங்களில் வீட்டை உடைத்து கொள்ளை சம்பவங்கள் நடந்துள்ளதாகவும், இதில் சுமார் 11.6 கிலோ (11,679கிராம்) தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது. அதேபோல் 2018ஆம் ஆண்டு 185 இடங்களில் கொள்ளை சம்பவங்கள் நடந்துள்ளது. இதன் மூலம் 14.8 கிலோ தங்கம் (14,874 கிராம்) கொள்ளையடிக்கபட்டதாகவும், மொத்தம் இரண்டு ஆண்டுகளில் சுமார் 26.5 கிலோ தங்கம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களிடம் இருந்து இதுவரை சுமார் 8.9 கிலோ தங்கம் மட்டுமே மீட்கப்பட்டுள்ளதாகவும் மற்ற வழக்குகள் அனைத்தும் விசாரணையில் இருப்பதாகவும் தகவல் அளிக்கப்பட்டுள்ளது.