மதுரை: மதுரை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே தற்கொலை செய்துக் கொள்வோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. குறிப்பாக விவசாயத்திற்குப் பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லி மருந்து உட்பட விஷம் குடித்து தற்கொலை செய்துக்கொள்வோர் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது.
இந்நிலையில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம், மதுரையை சேர்ந்த தன்னார்வலர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை நிர்வாகம் பதில் அளித்துள்ளது. அதில், மதுரை மாவட்டத்தில் கடந்த 2021ஆம் ஆண்டு சுமார் 2,380 பேரும், 2022ஆம் ஆண்டு 2,550 பேர் என கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் 4 ஆயிரத்து 930 பேர் விஷ மருந்து சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனக் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: TNPSC: குரூப்-2 தேர்வை மீண்டும் நடத்தக்கோரி வழக்கு: நீதிமன்றம் முக்கிய உத்தரவு!
இதில் கடந்த 2021ஆம் ஆண்டு 180 பேர், 2022ஆம் ஆண்டு 207 பேர் என இரண்டு ஆண்டுகளில் மதுரை மாவட்டத்தில் மட்டும் 387 பேர் உயிரிழந்துள்ளனர். இதே காலகட்டத்தில் அரசு மருத்துவ குழுவினரின் விரைவான சிகிச்சை முறையின் காரணமாக 4 ஆயிரத்து 543 பேர் குணமடைந்துள்ளதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையை பொறுத்தவரையில் விஷம் அருந்தி சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுபவர்களுக்கு பிரத்தியேக பிரிவு செயல்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தற்கொலை எதற்கும் தீர்வல்ல: தற்கொலை முடிவு என்பது எந்த பிரச்னைக்கும் சரியான தீர்வு அல்ல. உங்களுக்கு தற்கொலை செய்துக்கொள்ளும் எண்ணம் வந்தாலோ அல்லது மன உளைச்சலில் இருந்தாலோ மாநில சுகாதாரத்துறையின் தற்கொலை தடுப்பு எண் 104, அல்லது ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044–24640050 மூலம் இலவச ஆலோசனைகள் பெறலாம்.
இதையும் படிங்க: 8,000 ஆண்டுகள் பழமையான புதிய கற்கால தானிய அரைவை அமைப்பு மதுரை அருகே கண்டுபிடிப்பு!