மதுரை: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறைக்காகக் கடந்த ஐந்து ஆண்டுகளில் ஒதுக்கப்பட்ட நிதி ரூ.927 கோடியைப் பயன்படுத்தாமல் அரசு கஜானாவிற்கு திருப்பி ஒப்படைக்கப்பட்டுள்ளதாக ( Right to Information Act - RTI ) ஆர்டிஐ மூலம் வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தாண்டு தமிழ்நாடு பட்ஜெட் 2022-23 ஒதுக்கீட்டில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறைக்கு ரூ.4,281 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு அரசு பட்ஜெட் ஒதுக்கீடு செய்யப்படும்போது, ஒவ்வொரு துறைக்கும் எவ்வளவு பட்ஜெட் ஒதுக்கப்படுகிறது என்று பொதுமக்களுக்குத் தெரிவிக்கப்படுகிறது.
வெளிப்படைத் தன்மை எங்கே?
ஆனால், அவ்வாறு ஒதுக்கப்படும் நிதி முழுமையாகப் பயன்படுத்தப்பட்டு திட்டங்கள் நிறைவேற்றப்படுகின்றனவா?.. என்பதை பொதுமக்களுக்கு வெளிப்படத்தன்மையுடன் அறிவிப்பதில்லை. அரசும் தெரிவிக்க முன்வருவதில்லை. இதைக் கருத்தில் கொண்டு முதற்கட்டமாக ஆதிதிராவிடர் நலத்துறை மற்றும் பழங்குடியினர் நலத்துறையில் கடந்த 2011-12 முதல் 2020-21ஆம் நிதியாண்டுகள் வரையிலான நிதி ஒதுக்கீடு மற்றும் செலவினங்களின் விவரங்களை மதுரையைச் சேர்ந்த ஆர்டிஐ ஆர்வலர் கார்த்திக் தகவல் பெறும் உரிமைச்சட்டம் மூலம் கேட்டு இருந்தார்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்குப் பேட்டியளித்த சமூக ஆர்வலர்
இதுகுறித்து கார்த்திக் ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலில், 'ஆர்டிஐ மூலம் பெற்ற தகவல்களின் அடிப்படையில் தமிழ்நாடு ஆதிதிராவிடர் நலத்துறையில் கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் ரூ.9,27,61,68,000 (927 கோடிகள்) நிதி செலவு செய்யாமல் அரசு கஜானாவிற்கு திருப்பி ஒப்படைப்பு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2016-17 முதல் 2020-21 வரையிலான 5 ஆண்டுகளில், தமிழ்நாடு அரசு ஆதிதிராவிடர் நலத்துறைக்கு ரூ.15,192,38,98,000 (பதினைந்தாயிரத்து 192 கோடிகள்) நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. அதில், ரூ.14,264,77,30,000 (பதிநான்காயிரத்து 264 கோடிகள்) செலவினம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கஜானாவிற்கு திரும்ப ஒப்படைப்பு
மீதம் ரூ.927,61,68,000(தொள்ளாயிரத்து 27 கோடிகள்) வரை பயன்படுத்தப்படாமல்; அரசு கஜானாவிற்கு திரும்ப ஒப்படைப்பு செய்யப்பட்டுள்ளது. கடந்த நிதி ஆண்டான 2020-21இல் ரூ.3,552,56,14,000 நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதில், திட்டங்களுக்குச் செலவு செய்ததுபோக ரூ.249 கோடியே 67 லட்சம் பயன்படுத்தப்படாமல் அரசு கஜானாவிற்கு திரும்பச் சென்றுள்ளது.
இதற்கு முன்னர் 2015-16ஆம் நிதியாண்டில் ஒதுக்கிய நிதி முழுமையாகப் பயன்படுத்தப்பட்டு மேலும் ரூ.213 கோடி கூடுதலாக இத்துறையின் வளர்ச்சிப் பணிகளுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது.
அதிர்ச்சித் தகவல்
தமிழ்நாட்டில் சாதிய வன்கொடுமையால் பாதிக்கப்படும் பட்டியல் சாதி மக்களுக்கு, நிவாரண நிலுவைத் தொகைகள் முழுமையாகக் கிடைக்காமல் பல ஆண்டுகளாக அவதிப்படும் மக்கள் ஆயிரக்கணக்கில் உள்ளனர்.
ஆதிதிராவிடர் மக்களின் கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதார மேம்பாடு, பள்ளிகள், விடுதிகள், நூலகங்கள், குடியிருப்புப்பகுதிகளில் ஏற்படுத்த வேண்டிய அநேக வளர்ச்சித் திட்டங்கள் மேம்படுத்தப்படாமல் கிடப்பில் உள்ள நிலையில், கடந்த 5 ஆண்டுகளில் ரூ.927 கோடிகள் நிதி பயன்படுத்தாமல் இருப்பது அதிர்ச்சியளிக்கிறது' என்றார்.
தமிழ்நாடு அரசுக்கு வலியுறுத்தல்
மேலும், அவர் இதற்கு பரிந்துரைகள் ஆக சில கருத்துகளை முன்வைத்துள்ளார். அவை பின்வருமாறு, 'தமிழ்நாடு அரசு இந்தாண்டு தமிழ்நாடு பட்ஜெட் 2022-23இல் ஆதிதிராவிடர் நலத்துறை மற்றும் பழங்குடியினர் நலத்துறைக்கு ஒதுக்கிய ரூ.4,281 கோடிகள் நிதியை முழுமையாக அனைத்து நலத்திட்டங்களுக்கும் பயன்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும்.
கடந்த 5 ஆண்டுகளில் பயன்படுத்தாமல் ஒப்படைப்பு செய்யப்பட்டுள்ள ரூ.927 நிதியை மீண்டும் ஆதிதிராவிடர் நலத்துறை மற்றும் பழங்குடியினர் நலத்துறைக்குக் கிடைக்கப் பெறத் தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்' என வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: சீன விமான விபத்தில் 133 பயணிகள் உயிரிழப்பு?