ராமநாதபுரம் மாவட்டம் கமுதியைச் சேர்ந்த சிரஞ்சீவி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் ஒரு பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "கடந்த ஜூன் 25 அன்று சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை சார்பில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து அரசாணை பிறப்பிக்கப்பட்டது. மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இதனை, அரசு ஜனவரி 1 முதல் நடைமுறைப்படுத்தியது. ஆனால், சில தினங்களுக்கு மட்டுமே நெகிழிக்கு எதிராக கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
ஆனால், நாளடைவில் சட்டத்திற்கு புறம்பாக நெகிழியை பயன்படுத்துவது தொடர்ந்து வருகிறது. இதனால் விவசாயிகள் உற்பத்தி செய்யும் மூங்கில் பொருட்கள், பனை ஓலை பொருட்கள் போன்ற இயற்கை பொருட்கள் நலிவடையத் தொடங்குகின்றன. பிளாஸ்டிக் பயன்பாட்டால் விவசாயிகள் வாழ்வாதாரத்தை இழந்து கடனாளிகள் ஆகும் நிலை உள்ளது. அதோடு சுற்றுச்சூழல் மாசடைவதும் இதனால் அதிகரிக்கும். எனவே, நெகிழி பயன்பாட்டிற்கு தடை விதித்து பிறப்பிக்கப்பட்ட அரசாணைகளை முறையாக நடைமுறைப்படுத்த உத்தரவிட வேண்டும்" என குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் இந்த மனு நீதிபதிகள் சிவஞானம், தாரணி அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது மதுரை மாநகராட்சி தரப்பில், “பிளாஸ்டிக் பயன்பாட்டை முழுமையாக தடை செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 2018 டிசம்பர் முதல் கடந்த அக்டோபர் மாதம் வரை 28 லட்சத்து 11 ஆயிரத்து 900 ரூபாய் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது" என தெரிவிக்கப்பட்டது.
அதற்கு நீதிபதிகள், வாழையிலை பயன்பாட்டை ஊக்குவிப்பது, பை கொண்டு வருவோருக்கு சிறப்பு சலுகைகளை அறிவிப்பது, சுய உதவிக் குழுக்கள் மூலமாக துணிப் பைகளை விற்பது உள்ளிட்ட முயற்சிகளை முன்னெடுக்கலாம். ஆகவே இதுபோன்ற முயற்சிகளை முன்னெடுக்க சிறப்பு அதிகாரிகள் குழுவை நியமித்து, அது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய மதுரை மாநகராட்சி ஆணையருக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நவம்பர் 19ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.