மதுரை: மதுரை மாவட்டம் கல்லுப்பட்டி பேரூராட்சியில் நோய்த் தடுப்பு நடவடிக்கை குறித்து முன்னாள் அமைச்சரும், திருமங்கலம் சட்டப்பேரவை உறுப்பினருமான ஆர்.பி. உதயகுமார் நிர்வாக அலுவலரிடம் ஆலோசனை மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "அரசின் தீவிர நடவடிக்கை காரணமாக தினசரி கரோனா பாதிப்பு தற்போது படிப்படியாக குறைந்து வருவது சற்று ஆறுதல் அளிப்பதாக இருந்தாலும், இரண்டாவது அலையின் போது ஏற்பட்ட தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த தேவையான மருந்துவ கட்டுமானத்தை உருவாக்க அரசு தடுமாறியது.
தென் மாவட்டங்களில் தடுப்பூசி தட்டுப்பாடு குறித்து மக்கள் கோரிக்கை வைக்கின்றனர். இவ்விஷயத்தில் நடவடிக்கை எடுக்க அரசிடம் வேண்டுகோள் விடுக்கிறேன். தடுப்பூசி பெற்றுத்தர வேண்டிய இடத்தில் யார் இருக்கிறார்களோ அவர்களிடத்தில் கோரிக்கை வைக்கின்றோம் அவர்கள்தான் பெற்றுத்தர வேண்டும். திமுக எதிர்க்கட்சியாக இருக்கும்போது அவர்களிடம் நாங்கள் முறையிடவில்லை தற்போது கரோனா தடுப்பு மருந்து பெற்றுத்தரக் கூடிய இடத்தில் திமுக இருப்பதால் அவர்களிடம் முறையிடுகிறோம்.
கரோனா தொற்றிலிருந்து பாதுகாக்கும் விதமாக நியாயவிலைக் கடையில் வழங்கப்படும் அத்தியாவசியப் பொருட்களை வீட்டிற்கே கொண்டு சென்று வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க: நியாயவிலை கடைகள் மூலம் இலவச நாப்கின்கள் வழங்க வேண்டும் - பெண் வழக்கறிஞர் கோரிக்கை