மதுரை: தேசிய மருந்துசார் கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கழகம் அமைக்க வலியுறுத்தி மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினர் சு.வெங்கடேசன், விருதுநகர் மக்களவைத் தொகுதி உறுப்பினர் ப.மாணிக்கம் தாகூர் இருவரும் ஒன்றிய உரம் மற்றும் ரசாயனத்துறை அமைச்சர் சதானந்த கவுடாவை இன்று (ஜூன்.22) சந்தித்தனர்.
இதனைத் தொடர்ந்து எம்பி சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது, ”வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயக் கூட்டணி அரசால் கடந்த 1998ஆம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டத்தின்படி ’தேசிய மருந்துசார் கல்வி மற்றும் ஆராய்ச்சிக் கழகம் (NIPER)’ ஒரு தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனமாகும்.
மருந்துசார் அறிவியலில் மேம்பட்ட படிப்புகள் மற்றும் ஆராய்ச்சிக்காக ஒரு சிறப்பு மையத்தை உருவாக்கும் நோக்கத்துடன் மருந்துசார் அறிவியலில் முதல் தேசிய அளவிலான கழகமாக உருவாக்கப்பட்டது தான் தேசிய மருந்துசார் கல்வி மற்றும் ஆராய்ச்சிக் கழகம் (NIPPER). இந்திய அரசு, தேசிய மருந்துசார் கல்வி மற்றும் ஆராய்ச்சிக் கழகத்தை ஒரு தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனமாக பிரகடனப்படுத்தியுள்ளது. இது இந்திய அரசின் ரசாயனங்கள் மற்றும் உரங்கள் அமைச்சகத்தின் கீழ் உள்ள மருந்துசார் துறையின் கீழ் அமைக்கப்பட்டுள்ள ஒரு தன்னாட்சி அமைப்பாகும்.
இது இந்தியத் தொழில் நுட்பக் கழகத்திற்கு சமமான அந்தஸ்தை கொண்டதாகும். மருந்துசார் அறிவியலில் கல்வி மற்றும் ஆராய்ச்சியில் உலக அளவில் அங்கீகரிக்கப்பட்ட தர அடையாளத்துடன் உருவாக்கும் ஒரு பார்வையுடனும், மருந்துசார் தொழில் வளர்ச்சிக்காகவும், இந்திய மக்களின் நலனுக்காகவும் ஒரு தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனமாக தேசிய மருந்துசார் கல்வி மற்றும் ஆராய்ச்சிக் கழகத்தை உருவாக்குவது கட்டாயமாகும்.
தற்போது நாடு முழுவதும் தேசிய மருந்துசார் கல்வி மற்றும் ஆராய்ச்சிக் கழகங்கள் உள்ளன. முதல் கழகம் 1998ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. அதன் பிறகு மற்ற ஆறு கழகங்கள் 2007 - 08 காலக்கட்டத்தில் அகமதாபாத், கௌஹாத்தி, ஹைதராபாத், ஹாஜிபூர் (பீகார்), கொல்கத்தா மற்றும் லக்னோ ஆகிய இடங்களில் தொடங்கப்பட்டன.
முன்னதாக ஜனவரி 20, 2011 அன்று நடைபெற்ற எட்டாவது நிதி ஆணையத்தின் கூட்டத்தில் இதர ஐந்து கழகங்களுடன் மதுரையில் ஒரு தேசிய மருந்துசார் கல்வி மற்றும் ஆராய்ச்சிக் கழகத்தை உருவாக்க பரிந்துரை செய்யப்பட்டது.
மார்ச் 26, 2018 அன்று நடைபெற்ற எட்டாவது நிதி ஆணையத்தின் கூட்டத்தில் மதுரை உள்ளிட்ட இடங்களில் புதிய தேசிய மருந்துசார் கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கழகங்கள் அமைப்பது பற்றி மறு ஆய்வு செய்யப்பட்டது. எட்டாவது நிதி ஆணையத்தின் காலமான 2020-25இல் தேசிய மருந்துசார் கல்வி மற்றும் ஆராய்ச்சிக் கழகத்தை மதுரையில் தொடங்க முடிவு செய்யப்பட்டது.
தற்போது தென்னிந்தியாவில் இது போன்ற முதன்மையான ஆராய்ச்சிக் கழகம் இல்லாத நிலையில் மதுரையில் தேசிய மருந்துசார் கல்வி மற்றும் ஆராய்ச்சிக் கழகத்தை தொடங்குவது பொதுவாக இந்தியாவிற்கும், குறிப்பாக தென்னிந்தியாவிற்கும் உதவிடும்.
தமிழ்நாடு அரசு மதுரையில் தேசிய மருந்துசார் கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கழகம் அமைப்பதற்கென 116 ஏக்கர் நிலத்தை இலவசமாக ஏற்கனவே வழங்கியுள்ளது. மதுரையில் தேசிய மருந்துசார் கல்வி மற்றும் ஆராய்ச்சிக் கழகம் மாணவர் சேர்க்கையினைத் தொடங்கும் வகையில், ஒன்றிய உரம் மற்றும் ரசாயனத்துறை அமைச்சகம் முடிவெடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். மாணவர் சேர்க்கை தொடங்கினால், பயிற்றுவிப்பதற்கான தற்காலிகக் கட்டடங்களை நாங்கள் பெற்றுத் தருகிறோம் என்றும் கூறினோம்.
இது பற்றி ஒன்றிய அமைச்சர் சதானந்த கவுடா இன்றே துறை அலுவலர்களிடம் கலந்தாலோசித்து, நாளை எங்களிடம் தொலைபேசியில் பேசுவதாகவும், தொடர்ந்து துறை அலுவலர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தைக் கூட்டுவதாகவும் கூறினார்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: வேளாண் திருத்தச் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி தீர்மானம் - ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவிப்பு