ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் பகுதியைச் சேர்ந்தவர் ஆரோக்கியசாமி. இவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், " ராமநாதபுரம் சுற்றியுள்ள பகுதிகளில் பல மீனவர்கள் காணாமல் போகிறார்கள். அவர்களைக் கண்டுபிடிப்பதில் அரசு எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை. இதுவரை சுமார் 581 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சுட்டு கொல்லப்பட்டும், ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட மீனவர்கள் தாக்குதலுக்கு உள்ளாகியும், 3 ஆயிரம் பேர் காணாமல் போயுள்ளனர்.
இதேபோல் கடந்த 4ஆம் தேதி எனது உறவினர்கள் நான்கு பேர் பாம்பன் கிராமத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்றனர். இதுவரை கரை திரும்பவில்லை. காணாமல்போன மீனவர்களைத் தேடிய போது, 2 மீனவர்கள் உயிருக்குப் போராடி நிலையில் புதுக்கோட்டை மாவட்டம், ஜகதாப்பட்டினம் பகுதியில் கரை ஒதுங்கினர். மீதமுள்ள இருவரின் நிலைகுறித்து இதுவரை தெரியவில்லை.
மேலும் இதுகுறித்து பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தும் அவர்கள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே காணாமல் போன இரண்டு மீனவர்களையும் கண்டுபிடிக்க உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார். மனுவை விசாரித்த நீதிபதிகள் சத்யநாராயணன், புகழேந்தி தலைமையிலான அமர்வு காணாமல் போகும் மீனவர்களின் தற்போதைய நிலைக்குறித்து மத்திய, மாநில அரசுகள் அறிக்கை தாக்கல் செய்யக் கோரி உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.