மதுரையைச் சேர்ந்த முத்துச்செல்வம் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு ஒன்றினைத் தாக்கல்செய்திருந்தார். அதில், "வைகை ஆறு தேனி மாவட்டம் வருசநாடு பகுதியில் தொடங்கி தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களுக்கு வேளாண் பாசனத்திற்கும் குடிநீர் ஆதாரத்திற்கும் முக்கியமானதாக விளங்கிவருகிறது.
இந்த ஐந்து மாவட்ட மக்களின் ஜீவாதாரப் பிரச்சினையாக இந்த வைகை ஆறு உள்ளது. இந்த ஆற்றுக்குள் சாயக்கழிவுகள், மருத்துவக் கழிவுகள், வீட்டுக்குள் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகள் நேரடியாக வைகை ஆற்றுக்குள் கலக்கிறது. இதனால் வைகை ஆறு மாசுபடுவதுடன் நீராதாரம் கடுமையாகப் பாதிக்கப்படுகிறது.
கடந்த சில நாள்களுக்கு முன்பு இப்பகுதியில் ஏற்பட்ட கழிவுகள் நுரையாகப் பொங்கி வெளியேறியது. இந்த நுரையை தீயணைப்புத் துறையினர் அகற்ற முயன்றனர். அப்போது இந்த நுரையானது 15 மீட்டர் உயரத்திற்கு உருவாகி சாலையில் சென்றவர்களுக்கு இடையூறாக இருந்தது.
இதேபோல ஆற்றுக்குள் உள்ள ஆகாய தாமரையும் குடிநீரை மாசுபடுத்துவதுடன் ஆற்றுக்குள் செல்லும் தண்ணீரின் போக்கை நிறுத்தி தேக்கம் அடைய வைக்கிறது. வைகை ஆற்றுக்குள் நீர் மாசுபடுவதைத் தடுக்கும் வகையில் கழிவுநீர் செல்வதைத் தடுக்கவும், ஆகாயத் தாமரையை அகற்றவும் அலுவலர்களுக்கு உத்தரவிட வேண்டும்.
மேலும் இதேபோன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள நீர்நிலைகளில் உள்ள ஆகாய தாமரைகளை அகற்ற உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்" எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், ஆனந்தி ஆகியோர் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கு குறித்து பொதுப்பணித் துறை முதன்மைச் செயலர், மதுரை மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: ஆகாயத் தாமரையாலும், சாயப்பட்டறை கழிவாலும் பாதிப்படையும் குமரகிரி ஏரி!