மதுரை, அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் கடந்த சில நாள்களுக்கு முன்பாக கரோனா தொற்று உயிர்காப்பு மருந்தான ரெம்டெசிவிர் மருந்து விற்பனை தொடங்கியது. பல்வேறு மாவட்டங்களிலும் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து நின்று இந்த மருந்தை வாங்கிச் செல்கின்றனர்.
இந்நிலையில் ரெம்டெசிவிர் மருந்தை கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதாகக் குற்றச்சாட்டுகள் தொடர்ந்து எழுந்த வந்தது. மேலும் இது தொடர்பான வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வெளியாகி சலசலப்பை ஏற்படுத்தின. அந்த வகையில், இன்று (மே.13) மதுரையில் ரெம்டெசிவிர் மருந்தை கள்ளச்சந்தையில் விற்பனை செய்ததாக புதுவிளாங்குடியைச் சேர்ந்த இர்பான் கான் என்ற இளைஞரை காவல் துறையினர் கைது செய்தனர்.
தொடர்ந்து அவரிடம் காவல் துறையினர் நடத்திய விசாரணையில், கரோனாவால் உயிரிழந்தவர்களின் சிகிச்சை மருந்துச் சீட்டை பயன்படுத்தி முறைகேடாக ரெம்டெசிவர் மருந்தைப் பெற்று கள்ளச்சந்தையில் அவர் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும் கைது செய்யப்பட்ட இளைஞருடன் மருத்துவர்களுக்கு தொடர்பு உள்ளதா எனவும் காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.