மதுரை மேலமடை பகுதியில் சலூன் கடை நடத்திவருபவர் மோகன். கரோனா பெருந்தொற்று முதல் அலையின்போது அப்பகுதியில் கஷ்டப்படும் மக்களுக்கு தன் மகளின் எதிர்காலத்திற்காகச் சேமித்துவைத்திருந்த ரூபாய் 5 லட்சம் பணத்தைக் கொண்டு நிவாரண உதவிகளை வழங்கினார்.
அவரின் செயலை பிரதமர் நரேந்திர மோடி மனத்தின் குரல் நிகழ்ச்சியில் பாராட்டினார். மேலும், ஒன்பதாம் வகுப்பு பயிலும் மோகனின் மகள் நேத்ரா, ஐநாவால் அங்கீகரிக்கப்பட்ட UNADAPவில் ஏழை மக்களின் நல்லெண்ணத் தூதராகவும் அறிவிக்கப்பட்டார்.
இந்நிலையில், தற்போது கரோனா 2ஆம் அலை உச்சத்தில் உள்ளது. மீண்டும் அமலுக்குவந்த ஊரடங்கு கட்டுப்பாட்டால் நலிவடைந்த 100 முடிதிருத்தும் தொழிலாளிகளின் குடும்பத்திற்கு, தங்களது சொந்த செலவில் முகக்கவசம், அரிசி, பருப்பு, காய்கறிகள், மளிகைப் பொருள்கள், ஆகியவற்றை மோகன் அவரது மகள் நேத்ரா வழங்கி அசத்தியுள்ளனர்.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக அண்ணா நகர் காவல் நிலையம் ஆய்வாளர் பூமிநாதன் கலந்துகொண்டு நிவாரண பொருள்களை வழங்கினார்.
இதையும் படிங்க: காமராஜர் பல்கலை தொலைதூர கல்வி தேர்வு முறைகேடு வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்