மதுரை மேலுார் தெற்கு தெரு பகுதியைச் சேர்ந்த விஜயபாஸ்கர் என்பவர் தனது தந்தையுடன் இருசக்கர வாகனத்தில் மதுரை ஒத்தக்கடையில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு சென்றுள்ளார். அப்போது, இடத்தை பதிவு செய்வதற்காக தான் கொண்டு வந்த பணத்தினை அவரது இருசக்கர வாகனத்தில் உள்ள பெட்டியில் வைத்துவிட்டுச் சென்றுள்ளார்.
இதனை கண்காணித்த அடையாளம் தெரியாத நபர்கள், இருசக்கர வாகனம் அருகில் நின்றுகொண்டிருந்த விஜயபாஸ்கரின் தந்தையின் கவனத்தை திசைதிருப்பி பெட்டியில் வைக்கப்பட்டிருந்த 10 லட்சத்து 88ஆயிரம் ரூபாயை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
இடத்திற்கான பத்திரப்பதிவு முடிவடைந்த நிலையில், பணத்தை செலுத்துவதற்காக பெட்டியை திறந்துபார்த்த போது பெட்டியினுள் இருந்த பணம் கொள்ளையடிக்கப்பட்டதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
இதனையடுத்து விஜயபாஸ்கர் ஒத்தக்கடை காவல் நிலையத்தில் புகார் அளித்ததையடுத்து, சம்பவ இடத்தில் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். அருகில் உள்ள சிசிடிவிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
பட்டப்பகலில் பத்திரப்பதிவு அலுவலகத்தின் முன்பு 10 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.