உலக குடும்ப தினம், ஆண்டுதோறும் மே 15ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்நாளில் பெண்மையின் சிறப்பை உணர்த்தும் வகையில், காபி பொடி மூலம் ஓவியம் வரைந்து அசத்தியுள்ளார் மாணவி கீர்த்திகா.
மதுரை மாவட்டம், மேல அனுப்பானடியில் வசிக்கும் இவர், திருப்பூரில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் 'பேஷன் டெக்னாலஜி' துறையில் இறுதியாண்டு பயின்று வருகிறார். உலக குடும்பத் தினத்தில், குடும்பத்திற்கு ஆணிவேராக விளங்கக்கூடிய பெண்ணின் சிறப்பை காபி பொடி மூலம் வரையும் முயற்சியைக் கையில் எடுத்தார்.
அதில் பெண்மையைப் போற்றும் விதமாக, பெண்ணின் இளமைப்பருவம், திருமணம், தாய்மை அடைதல், குழந்தைப்பேறு, முதுமை அடைதல் என, வாழ்க்கையின் பல்வேறு படிநிலைகளை 11 ஓவியங்களாக வரைந்துள்ளார். 160 சதுர அடி வெள்ளை நெகிழியில் காலை 8 மணிக்கு வரையத் தொடங்கிய கீர்த்திகா, சுமார் 12 மணி நேரம் தொடர்ச்சியாக ஓவியம் வரைந்துள்ளார்.
வண்ண வண்ண நிறங்களில் பலர் ஓவியம் வரைந்து சாதனை படைக்கும் நிலையில், கீர்த்திகாவின் காபி பொடி ஓவியம் பலரின் பாராட்டுகளைப் பெற்றுள்ளன. இதுகுறித்து அவர் கூறுகையில், " காபி ஆர்ட் குறித்து முதலில் கொஞ்சமாகவே எனக்குத் தெரியும். ஆனால், கடந்த கரோனா முதல் அலையின் போது வீட்டிலிருந்த சமயத்தில், அதில் நன்கு வரையக் கற்றுக் கொண்டேன்.
குடும்பத்தில் முக்கியமானவர் தாய் என்பதாலும், அப்பாவுக்கும் மேல் தாயைப் பார்ப்பதால் இந்த உலக குடும்ப தினத்தில் ஒரு பெண் பிறப்பதிலிருந்து கல்யாணம் செய்வது, குழந்தைகளை பெறுவது, குடும்பத்தை வழிநடத்துவது என, 11 வித ஓவியங்களை வரைந்துள்ளேன்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 'கரோனாவிலிருந்து மீண்டவர்களுக்கு புதிய தொற்று' - மியூகோர்மைகோசிஸ் என்றால் என்ன?