மதுரை: விஜயநகர பேரரசின் தொடர்ச்சியாக நாயக்க மன்னர்கள் ஏறக்குறைய 450 ஆண்டுகள் மதுரையை ஆட்சி புரிந்தனர். அவர்கள் ஆட்சியில் குறிப்பிடத்தகுந்த பெண்ணரசியாக கருதப்படுபவர் ராணி மங்கம்மாள். இவர் ஆட்சிக்காலத்தில் தான் மதுரையிலிருந்து அண்டையில் உள்ள பல்வேறு மாவட்டங்களுக்கு நெடுகிலும் அந்த வழிகள் செல்லும் பாதையிலும் சத்திரங்கள் அமைக்கப்பட்டன. இதனால் வழிப்போக்கர்கள் பெரிதும் பயன் பெற்றனர். ராணி மங்கம்மாளின் நினைவை சுமந்து கொண்டிருக்கும் வெகு சில இடங்களில் ஒன்றுதான் மதுரை சந்திப்புக்கு நேர் எதிரே அமைந்துள்ள மங்கம்மாள் சத்திரம்.
அதேபோன்று ராணி மங்கம்மாளின் கோடை கால அரண்மனையாக இருந்த இடம்தான் தற்போது காந்தி நினைவு அருங்காட்சியகம் செயல்பட்டு வருகிறது. மேலும் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கிழக்கு கோபுரம் செல்லும் சாலையில் ராணி மங்கம்மாள் அரண்மனையின் ஒரு பகுதி தற்போதும் அமைந்துள்ளது.
நாயக்க மன்னர்களில் கடைசி அரசராக கருதப்படும் மீனாட்சி நாயக்கர் என்ற பெண்ணரசி இந்த அரண்மனையில் தான் வாழ்ந்து மடிந்தார்.
8447 சதுர அடியில் அமைந்துள்ள இந்த கட்டடம் தொடக்கத்தில் விருந்தினர் இல்லமாகவும் பிறகு பொதுப்பணித்துறையின் பெரியாறு-வைகை நீர்வள ஆதார அலுவலகமாகவும் தற்போதுவரை இயங்கி வந்தது.
புராதனப் பெருமை மிக்க இந்த கட்டடத்தை தற்போது பொதுப்பணித்துறை நினைவுச் சின்னமாக பராமரிக்க உள்ளதால் தமிழக அரசு ரூ.1 கோடியே 98 லட்சத்தை ஒதுக்கி உள்ளது. 333 வருடங்கள் பழமை வாய்ந்த இந்த கட்டடம் ராணி மங்கம்மாளின் நினைவைப் பறைசாற்றும் வகையில் மதுரையின் மற்றொரு நினைவுச் சின்னமாக உருவாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மதுரை - காசி இடையே பாரத் கெளரவ் ரயில் இயக்க பரிசீலனை - தெற்கு ரயில்வே பொது மேலாளர் தகவல்