மதுரை: மேகதாது அணையை 69 டிஎம்சி கொள்ளளவு கொண்டு கட்டுவதற்காக கர்நாடக அரசின் நிதிநிலை அறிக்கையில் நிதி ஒதுக்கியதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏன் கண்டனம் கூட தெரிவிக்கவில்லை என ஆர்.பி.உதயக்குமார் கேள்வியெழுப்பியுள்ளார். மேகதாது அணை கட்டினால், தமிழகம் பாலைவனம் ஆகுமெனவும், தமிழகத்தின் காவிரி நீர் ஜீவாதார உரிமை பறிபோவதைக் கண்டு மு.க.ஸ்டாலின் மௌனம் காப்பதாகவும், ஆசிரியர்கள் போராட்டத்திற்கு தீர்வு எட்டப்பாடாத நிலையில், விளம்பரத்தின் மூலம் திமுக ஆட்சி செய்தாகவும் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.
எஸ்.எஸ்.காலனி பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் மகாளாய அமாவாசையை முன்னிட்டு நடந்த பார்வையற்றோருக்கு அரிசி வழங்கும் நிகழ்ச்சி மற்றும் அன்னதானம் நிகழ்ச்சியில் பங்கேற்ற சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் செய்தியார்களிடம் பேசிய அவர், 'திமுக அரசு கையாளாகாத படி, அனைத்து திட்டங்களிலும் குளறுபடியின் மொத்த வடிவமாக உள்ளது.
520 தேர்தல் வாக்குறுதியை கொடுத்துவிட்டு அதை 100% நிறைவேற்றி விட்டதாக முதலமைச்சர் பொறுப்பில் இருந்து கொண்டு ஸ்டாலின் பச்சைப்பொய் பேசுகிறார். கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்று பாதிப்படைந்த மக்கள் போராடி வருகிறார்கள். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் போல, 520 தேர்தல் வாக்குறுதிகளில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பற்றி கூறியுள்ளார்கள். அதில், 50 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை வழங்குவோம் என்று கூறிவிட்டு, ஐந்தரை லட்சம் அரசு காலி பணியிடங்களை நிரப்புவோம் என்று கூறினார்கள். இதுவரை 11 ஆயிரம் மேற்பட்ட வேலைவாய்ப்பு தான் வழங்கப்பட்டுள்ளது' என்று குற்றம்சாட்டினார்.
பறிபோகும் காவிரி நீர் ஜீவாதார உரிமை; மௌனம் காக்கும் மு.க.ஸ்டாலின்: 'காவிரியில் ஜீவாதார உரிமை பறிபோகிறது; மேகதாது அணை கட்டிவிட்டால் தமிழகம் பாலைவனமாக மாறிவிடும் கடும் உணவு பஞ்சம் ஏற்பட்டு விடும். கிருஷ்ணசாகர், கபினி, ஹேமாவதி ஆகிய அணைகளில் 15 டிஎம்சி, 45 டிஎம்சி, 35 டிஎம்சி கொள்ளளவு உள்ளது. ஆனால், மேகதாது அணையை 69 டிஎம்சி கொள்ளளவு கொண்டு கட்டுவதற்காக கர்நாடக அரசின் நிதிநிலை அறிக்கையில் நிதி ஒதுக்கப்பட்டதற்கு, இதுவரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் கூட தெரிவிக்கவில்லை.
தமிழகம் பாலைவனமாகும்: சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியபோது மத்திய அரசை வலியுறுத்துவதோடு, கர்நாடக அரசையும் வலியுறுத்தி கண்டிக்க வேண்டும் என எடப்பாடி கே.பழனிசாமி கேள்விகளை முன்வைத்தார். ஆனால், முதலமைச்சர் மழுப்பலாக பதில் கூறி திசை திருப்பினார். மாநில உறவுகள் முக்கியம்; உரிமை என்பது அதைவிட முக்கியம். உரிமைகள் பறிபோனால், தமிழகம் பாலைவனமாக ஆகிவிடும். டெல்டா நெற்களஞ்சியத்தை காவு கொடுத்துவிட்டு எதைக் காப்பாற்றப் போகிறோம்?
காவிரி மேலாண்மை வாரியம், ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்த தண்ணீரை இன்னும் வழங்கவில்லை. மேட்டூர் அணையில் 100 அடி இருக்கும்போது, ஸ்டாலின் எந்த ஆய்வும் மேற்கொள்ளாமல் தண்ணீர் திறந்து விட்டார். தற்போது 41 ஆண்டு காலம் இல்லாத அளவில் மேட்டூர் அணை 39 அடிக்கு கீழே சென்றுவிட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளாக குறுவைக்கு பயிர் காப்பீட்டை அரசு செய்யவில்லை.
யானைப் பசிக்கு சோளப்பொரி: எடப்பாடியார் முதலமைச்சராக இருந்தபோது, குறுவை சாகுபடிக்கு பயிர் காப்பீடு மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையில் இருந்து இடுபொருள் மானியம் உட்பட ஒரு ஏக்கருக்கு அதிகபட்சம் ரூ.84,000 வழங்கினார். ஆனால், தற்போது ஒரு ஹேக்டேருக்கு ரூ.13,000 வழங்கப்படுகிறது. அப்படியென்றால், ஒரு ஏக்கருக்கு ரூ.5,500 ரூபாய் ஆகும். இது 'யானைப் பசிக்கு சோளப்பொரி' போல உள்ளது; இது விவசாயி வயிற்றில் அடிப்பது போல் உள்ளது.
குடும்ப செல்வாக்கால் ஜொலிக்கும் செயற்கை நட்சத்திரம், உதயநிதி ஸ்டாலின்: இங்கே விவசாயிகள் செத்து மடிகிறார்கள், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை, ஆசிரியர் போராட்டத்துக்கு தீர்வில்லை. ஆனால், முதலமைச்சர் விளம்பரத்தின் மூலம் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறார். ஒரு அரசு விழாவில் அமைச்சர் உதயநிதியை ஸ்டாராக இருப்பதால் துறையும் ஸ்டாராக வளர்ந்து இருக்கிறது என ஸ்டாலின் பாராட்டி உள்ளார். உதயநிதி ஸ்டாலின் தனது தாத்தா, தந்தை, குடும்ப செல்வாக்கால் செயற்கை நட்சத்திரமாக தான் உயர்ந்துள்ளார். மக்கள் செல்வாக்கால் ஜொலிக்கவில்லை. செயற்கை நட்சத்திரம் பிறரின் வெளிச்சத்தில் தான் சார்ந்து இருக்கும் சுயமாக வெளிச்சம் தர முடியாது' என கடுமையாக சாடியுள்ளார்.
மேலும் பேசிய அவர், 'அதிமுக மகளிர் உரிமை காப்பதில் இந்தியாவிற்கு வழிகாட்டியாக இருப்பதோடு, பெண் சிசுக்கொலையை தடுக்க ஜெயலலிதா 'தொட்டில் குழந்தை திட்டம்' கொண்டுவந்ததை, அன்னை தெரசா பாராட்டினார். அதேபோல் மகளிர் காவல் நிலையங்கள், பெண்களுக்கு இருசக்கர வாகன திட்டம், பெண்களுக்கு 'தாலிக்கு தங்கம் திட்டம்' உள்ளிட்ட பல திட்டங்களை கொண்டு வந்தநிலையில், தொடர்ந்து எடப்பாடி அதனை செயல்படுத்தி வந்தார் என புகழாரம் சூடினார்.
இதையும் படிங்க: திமுக மகளிர் உரிமை மாநாடு; சென்னை வந்த சோனியா காந்தியை வரவேற்ற முதலமைச்சர் ஸ்டாலின்!