மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 72ஆவது பிறந்தநாளை முன்னிட்டு மதுரை திருப்பரங்குன்றத்தில் நலத்திட்டம் வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவில் தமிழக வனத் துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு, வருவாய் மற்றும் பேரிடர் மீட்புத் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்ச்சியில், அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறியதாவது:
தமிழ்நாட்டில் முதல் பெண் காவல் நிலையம் அமைத்தவர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா. தங்கம் விலை எவ்வளவு உயர்ந்தாலும், ஒரு பவுன் தங்கம் கொடுத்ததும் அதே முன்னாள் முதலமைச்சர்தான். ஜெயலலிதாவிற்கு கிடைத்த தொண்டர்கள் போல் நாட்டில் வேறு யாருக்கும் கிடைக்கவில்லை.
தமிழ்நாட்டில் டெல்டா பகுதிகளை அறிவித்து, அதற்காகப் பாராட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதே போன்று, ஸ்டாலின் பாராட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டது எனில், நிதி கொடுத்தால்தான் ஸ்டாலின் வருவார்.
ராஜகண்ணப்பன் நடத்திய விழாவில் நிதி கொடுத்தால்தான் வருவேன் எனக் கூறிய ஸ்டாலின், நிதி தருகிறேன் என வாக்களித்த பின்புதான் மதுரைக்கு வந்தார்.
ஆண்களுக்குள்ளேயே புரணி பேசுபவர் ஸ்டாலின். ’டெல்டா மாவட்டங்களில் பிறந்தவன், டெல்டாவை காப்பாற்றுவேன்’ என்று கூறியவர், ஸ்டாலின். ஆனால், டெல்டா பகுதியைப் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவித்ததற்குகூட ஸ்டாலின் நன்றி கூறவில்லை. அவரை மக்கள் ஏற்கத் தயாராக இல்லை.
திமுக காலத்தில் ஒரு கோடியாக இருந்த கடன் தொகை, வட்டிக்கு மேல் வட்டியாகி, தற்போது 4.5 கோடியாக உயர்ந்துள்ளது. சட்ட ஒழுங்கிற்கு விருது, உள்ளாட்சி அமைப்பிற்கு விருது, வருவாய்த் துறைக்கு குடியரசுத் தலைவர் விருது, கூட்டுறவுத் துறைக்கு குடியரசுத் தலைவர் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளோம். தமிழ்நாட்டிற்கு நல்லாட்சி விருது பெற்றுத்தந்தவர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிதான்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: நீர் மேலாண்மையை ஊக்குவிக்கும் முதலமைச்சர் பழனிசாமி!