மதுரை மாநகர காவல் ஆணையர் தரப்பில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், "மதுரையில் 100 வார்டுகளிலும் ரத யாத்திரையை நடத்த அனுமதி வழங்கி தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். சட்டம் ஒழுங்கை பாதிக்கும் வகையிலும், மத கலவரத்தை ஏற்படுத்தும் வகையிலான பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள், கட்சி மற்றும் கட்சி சாராத நிறுவனங்களின் பொது நிகழ்வுகள் போன்றவற்றுக்கு அனுமதி வழங்க வேண்டாம் என்பதை கருத்தில் கொள்ளாமல் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாகப் பரவி வரும் சூழலில், இதுபோன்ற யாத்திரைக்கு அனுமதி வழங்குவது மிகப் பெரும் விளைவுகளை ஏற்படுத்தும். ட்ரஸ்ட் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு முறையாக பதில் அளிக்காததன் மூலம், அவர்கள் சட்டத்தை மதிக்காதது தெரிய வருகிறது.
பிப்ரவரி 19ஆம் தேதி கரிமேடு பகுதியில் கூடி சட்ட ஒழுங்குப் பிரச்னையை ஏற்படுத்தும் வகையில், சட்டவிரோத ரத யாத்திரையை மேற்கொண்டதன் காரணமாக அப்பகுதியில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
ஆகவே சட்டம் ஒழுங்கு, மதக்கலவர பிரச்னைகள், கரோனா தொற்றின் இரண்டாம் அலையைக் கருத்தில் கொண்டு மதுரையில் ரத யாத்திரைக்கு அனுமதி வழங்கிய தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்" என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆனந்தி அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில்," கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அந்த அமைப்பு சார்பில் உரிய பதிலளிக்கப்படவில்லை. பொங்கல் சமயத்தில், சில அமைப்பினரால், சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்ட இடத்திலேயே மதக்கலவரம் ஏற்படும் சூழல் உருவானது.
இந்த சூழலில் ரத யாத்திரைக்கு அனுமதி வழங்கினால், சட்ட ஒழுங்கு, மத பிரச்சனை ஏற்படும் வாய்ப்புள்ளது. ஆகவே தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்" என வாதிடப்பட்டது.
இதையேற்ற நீதிபதிகள், குறிப்பிட்ட நேரத்தில் காவல்துறையினர் அனுமதி அளிக்கும் வழித்தடத்தில் மட்டும் ரத யாத்திரை நடத்த இயலுமா? என்பது குறித்து தகவல் பெற்று தெரிவிக்க அரசு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டு வழக்கை நாளைக்கு ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க: சாத்தான்குளம் சம்பவத்தில் தடயங்களை அழிக்க வாய்ப்பு; இன்றே விசாரணையைத் தொடங்க சிபிசிஐடிக்கு உத்தரவு!